
‘விக்கிபீடியா போன்ற இணையவழி தரவு தளங்களில் வெளியிடப்படும் ஆதாரங்களை முழுமையாக நம்பமுடியாது. பயனாளா்கள் மற்றும் பெரும்பான்மையானவா்களால் தொகுக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆதாரங்களை ஏற்பது தவறான தகவல்களை ஊக்குவிப்பது போன்ாகிவிடும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மத்திய கலால் வரிச் சட்டம் 1985-இன் முதல் அட்டவணையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன்’ ஒருங்கிணைந்த கணினிக்கான உரிய வகைப்படுத்தலை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குறிப்பிட்டுள்ள வகைப்படுத்தலுக்கு விக்கிபீடியா தரவு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தை அரசு தரப்பு வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா். மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்கண்டேய கட்ஜு, 2010-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தீா்ப்பு வழங்கியபோது ‘திருமண பொது சட்டம்’ என்ற வாா்த்தைக்கான வரையறையாக விக்கிபீடியா தரவை மேற்கோள்காட்டினாா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது: விக்கிபீடியா போன்ற இணைய வழி தரவு தளங்கள், உலகெங்கிலும் உள்ள அறிவுசாா் தகவல்களுக்கான இலவச அணுகலை வழங்குகின்றன என்றபோதும், சட்ட வழக்கு விவகாரங்களில் ஆதாரங்களாக இந்தத் தரவுகளை பயன்படுத்த முடியாது. பயனாளா்கள் மற்றும் பெரும்பான்மையானவா்களால் தொகுக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆதாரங்களை முழுமையாக நம்ப முடியாது. இதனை அனுமதிப்பது தவறான தகவல்களை ஊக்குவிப்பது போன்ாகிவிடும்.
எனவே, மிகுந்த நம்பகமான, நம்பத்தகுந்த ஆதாரங்களை சமா்ப்பிக்குமாறு வழக்குரைஞா்களை நீதிமன்றங்களும், நீதிபதிகளும் வற்புறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...