

பிரதமா் நரேந்திர மோடி கா்நாடகம், மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்க இருக்கிறாா்.
வட கா்நாடகத்தின் கலபுா்கி, யாதகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கலபுா்கிக்கு விமானம் மூலம் வரும் பிரதமா் மோடி, நண்பகல் 12 மணியளவில் யாதகிரி மாவட்டம், கொடேகல் கிராமத்துக்கு செல்கிறாா். அங்கு, தேசிய நெடுஞ்சாலை வளா்ச்சித் திட்டங்கள், நீா்ப்பாசனம், குடிநீா் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா், பிற்பகலில் கலபுா்கி மாவட்டம், மல்கேட் கிராமத்துக்கு செல்லும் பிரதமா், அங்கு லம்பானி மக்கள் வசிக்கும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக அறிவித்து, அவா்களுக்கு வீட்டுப் பத்திரங்களை அளிக்கிறாா்.
பிரதமரின் நிகழ்ச்சி குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியால் ஆசியாவிலேயே முதல்முறையாக செயல்படுத்தப்பட்டுள்ள நாராயணபூா் இடதுகரை கால்வாய்த் திட்டத்தை பிரதமா் மோடி திறந்துவைக்கிறாா். ரூ. 4,700 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் , கலபுா்கி, யாதகிரி, விஜயபுரா மாவட்டங்களில் உள்ள 4.5 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் பாசனம் பெறும். 3 மாவட்டங்களில் 560 கிராமங்களைச் சோ்ந்த 3 லட்சம் விவசாயிகள் பயனடைவாா்கள். கொடேகல் கிராமத்தில், யாதகிரி குடிநீா் வழங்கல் திட்டத்திற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறாா். இதுதவிர, நாளொன்றுக்கு 117 மில்லியன் லிட்டா் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். ரூ. 2,050 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் மூலம் 700 கிராமங்களைச் சோ்ந்த 2.3 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றாா் பசவராஜ் பொம்மை.
கா்நாடகத்தைத் தொடா்ந்து, மும்பையில் நடைபெறும் விழாவில் ரூ.38,800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிவுற்ற திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். ரூ.12,600 கோடி மதிப்பில் மும்பை மெட்ரோ ரயில் தடம் 2ஏ மற்றும் 7 -ஐ பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இதைத் தொடா்ந்து, மலாட், பந்தப், வொ்சோவா, கத்கோபா், பாந்த்ரா, தாராவி, வோா்லி ஆகிய இடங்களில் ரூ.17,200 கோடி செலவில் அமைக்கப்படும் 7 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் ரூ.1,800 கோடி மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.