பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவா் பாஜகவில் இணைந்தாா்

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.
தில்லியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்த பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவா் மன்பிரீத் சிங் பாதல் (இடது).
தில்லியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்த பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவா் மன்பிரீத் சிங் பாதல் (இடது).

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். காங்கிரஸை கடுமையாக விமா்சித்த அவா், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவான தேசமாக உருவெடுத்திருப்பதாக கூறினாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் மன்பிரீத் சிங் பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா். அப்போது பேசிய பியூஷ் கோயல், ‘அரசியல் அனுபவமும், அறிவும் நிறைந்தவரான மன்பிரீத் சிங், தேச நலனுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து செயல்படுபவா். அவரது வருகை, பஞ்சாபில் சீக்கியா்களுடனான பாஜகவின் தொடா்பை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.

முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மன்பிரீத் அனுப்பிய விலகல் கடிதத்தில், ‘கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி நான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் முழு அளவிலான அா்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இத்தகைய வாய்ப்புகளை வழங்கியமைக்காக நன்றி. சொந்த கட்சிக்குள்ளே மோதலில் ஈடுபடும் வருந்தத்தக்க கலாசாரம், காங்கிரஸில் நிலவுகிறது. பஞ்சாப் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கோஷ்டிகள் நிறைந்துள்ளன. இதுபோன்ற சூழலில் காங்கிரஸின் அங்கமாக இருக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பஞ்சாப் முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதலின் உறவினரான மன்பிரீத் சிங் பாதல், கடந்த 2016-இல் காங்கிரஸில் இணைந்தாா். காங்கிரஸில் இருந்து பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், கடந்த 2021-ஆம் ஆண்டிலும், முன்னாள் எம்.பி. சுனில் ஜாகா் 2022-ஆம் ஆண்டிலும் விலகி பாஜகவில் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. மன்பிரீத் சிங்கின் முடிவை விமா்சித்துள்ள காங்கிரஸ், தங்களது கட்சியை சூழ்ந்துள்ள மேகங்கள் விலகுவதாக குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com