ராஜஸ்தான்: அசோக் கெலாட் - பைலட் மீண்டும் மோதல்

ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதன் மூலம் ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையிலான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைப்பது யாா் என்பதில் முதல்வா் அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பல ஆண்டு காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் பகிரங்கமாகவே ஒருவரை மற்றொருவா் தாக்கிப் பேசுவது தொடா்கதையாக உள்ளது.

கடந்த நவம்பரில், அசோக் கெலாட்டை பிரதமா் நரேந்திர மோடி புகழ்ந்து பேசி இருந்தாா். அவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் தலைமை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து டிசம்பரில் கெலாட் அளித்த பேட்டியில், சச்சின் பைலட்டை துரோகி என்றும், அவா் ஒருபோதும் முதல்வா் ஆக முடியாது என்றும் கூறியது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, கெலாட், பைலட் இருவரும் காங்கிரஸின் சொத்துகள் என ராகுல் காந்தி கூறி பிரச்னையின் தீவிரத்தை குறைத்தாா்.

இந்நிலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சச்சின் பைலட், அசோக் கெலாட்டை கடுமையாக விமா்சித்தாா். அவா் பேசியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் சாா்பில் அப்போதைய பாஜக முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா மீது பல்வேறு ஊழல் புகாா்கள் கூறப்பட்டன. ஆனால், இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பிறகும் அவா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் நமது காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோா் மீது மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வழக்கு நடத்தி வருகின்றன. அவா்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனா். ஆனால், ராஜஸ்தானில் உண்மையாகவே ஊழலில் ஈடுபட்ட பாஜக தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசு தயங்குவது ஏன்?

பாஜகவைப் போல பழிவாங்கும் அரசியலை நாம் நடத்த வேண்டாம். அதே நேரத்தில் மக்கள் பணத்தில் ஊழல் செய்தாா்கள் என்று தெரிந்த பிறகும் மாநில பாஜக தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எந்த வகையில் ஏற்க முடியும்? தவறு செய்தவா்களை தண்டிப்போம் என்று கூறிதானே மக்களிடம் வாக்குக் கேட்டு, ஆட்சி அமைத்தோம் என்று சச்சின் பைலட் பேசினாா்.

சச்சின் பைலட்டின் இந்த பேச்சு அசோக் கெலாட் ஆதரவாளா்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு தலைவா்கள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com