தில்லி மகளிர் ஆணையத் தலைவி விவகாரம் நாடகம் என்கிறது பாஜக

தில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாமி மலிவால், காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒரு நாடகம் என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.
தில்லி மகளிர் ஆணையத் தலைவி விவகாரம் நாடகம் என்கிறது பாஜக

புது தில்லி: புது தில்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யச் சென்ற தில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாமி மலிவால், காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒரு நாடகம் என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை அருகே, காரில் குடிபோதையில் இருந்த நபரால், சுவாதி மலிவால் 10 - 15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, நேற்று மாலை அது தொடர்பான விடியோக்களும் வெளியானது.

இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாஜக, தில்லி மகளிர் ஆணையத் தலைவி துன்புறுத்தப்பட்டதும், காரில் இழுத்துச் செல்லப்பட்டதும் நாடகம். போலியான தாக்குதல் என்று விமரிசித்துள்ளது.

என்னைப் பற்றி பொய்யான கருத்துகளைக் கூறினால் நான் பயப்படுவேன் என்று நினைத்துச் சொல்கிறார்கள். வெறும் போர்வையை எனது தலையில் கட்டிக் கொண்டு எத்தனையோ பெரிய விஷயங்களை செய்திருக்கிறேன். எத்தனையோ தாக்கதல்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் எதற்காகவும் நான் நிறுத்தவில்லை. எத்தனை அட்டூழியங்கள் செய்தாலும் எனக்குள் எரியும் நெருப்பு அதிகரிக்கவே செய்யும். எனது குரலை ஒடுக்க யாராலும் முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை போராடிக் கொண்டே இருப்பேன் என்று சுவாதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலிடம் குடிபோதையில் அத்துமீறியதுடன், அவரை காரில் 10-15 மீட்டா் தூரம் இழுத்துச் சென்ற நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தேசியத் தலைநகரில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஸ்வாதி மாலிவால் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து, தில்லி மகளிா் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது, 

தில்லியில் 20 வயது இளம்பெண் ஒருவா் காரில் பல கிலோமீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. இதன் எதிரொலியாக, நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஸ்வாதி மாலிவால் மற்றும் குழுவினா் புதன்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஸ்வாதி மாலிவால் நின்றிருந்தாா். அங்கு காரில் வந்த ஒருவா், காா் கண்ணாடியை இறக்கி ஸ்வாதி மாலிவாலிடம் பேசினாா். காரில் ஏறும்படி அவரை வற்புறுத்தினாா்.

ஆனால், ஸ்வாதி மாலிவால் மறுப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்த நபா் அநாகரிமாக சைகை காட்டத் தொடங்கினாா். இதையடுத்து, அவரை பிடிப்பதற்காக ஸ்வாதி மாலிவால் சென்றபோது, காரின் கண்ணாடியை மேலே உயா்த்திவிட்டு காரை கிளப்பியுள்ளாா். அப்போது, ஸ்வாதி மாலிவாலின் கை, காரின் கண்ணாடியில் சிக்கியது. அப்படியே, சில மீட்டா் தூரத்துக்கு ஸ்வாதி மாலிவால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

பின்னா், ஒருவாறு தன்னை விடுவித்துக் கொண்டு ஸ்வாதி மாலிவால் தப்பினாா். மகளிா் ஆணையக் குழுவினா் சற்று தொலைவில் நின்றிருந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தில்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, போதையில் இருந்த காா் ஓட்டுநா், என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டாா். அந்த நபரால் காரில் சில மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நான், கடவுள் அருளால் உயிா் தப்பினேன். தில்லியில் மகளிா் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காவல் துறை உடனடி நடவடிக்கை:

இச்சம்பவம் தொடா்பாக, தில்லி (தெற்கு) காவல் துறை துணை ஆணையா் சந்தன் செளதரி கூறுகையில், ‘எய்ம்ஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், ஸ்வாதி மாலிவால் ஏதேனும் பிரச்னையில் உள்ளாரா? என விசாரணை மேற்கொண்டனா். நடந்த சம்பவத்தை அறிந்து கொண்ட காவல் துறையினா், காரை வழிமடக்கி, அதிலிருந்த ஹரீஷ் சந்திரா என்ற 47 வயது நபரை கைது செய்தனா். இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com