பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசர் வரும்: காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல்

பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர்...
பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசர் வரும்: காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல்


போபால்: பாஜகவில் சேருங்கள் இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர் ஒருவர் பேசிய விடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநில ஆளும் பாஜக பஞ்சாயத் துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, ருதியாய் நகரில் நடந்த ரகோகர் நகராட்சி தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ‘பாஜக ஆளும் மாநிலங்களில் புல் டோசர் மூலம் நீதி வழங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோதப் பகுதிகளை புல்டோசரை கொண்டு இடித்து வருகிறது. இந்த நடைமுறையை 'அம்மா' என்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அடிக்கடி பாராட்டி வருகிறார். இது குற்றம் மற்றும் குற்றவாளிகள் மீதான அவரது அரசாங்கத்தின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின்" சின்னம்.

எனவே, "காங்கிரஸ் உறுப்பினர்கள் மெதுவாக ஆளும் பாஜகவில் சேருங்கள்; இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள். 2023-இல் நடக்கும் மத்தியப் பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது புல்டோசர் தனது வேலையை செய்யும்" என்று  கூறினார்.

இவரது பேச்சு தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அமைச்சர் பேசிய கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குணா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிசங்கர் விஜயவர்கியா கூறுகையில், "நிதானத்தை இழந்து பேசி வரும் அமைச்சரின் கருத்துகள் பாஜகவின் மதிப்பை கெடுத்துவிட்டதாகவும், இதன் மூலம் பாஜகவின் உண்மை முகம் தெரிந்துள்ளது. அவர் தனது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு ரகோகர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று விஜயவர்கியா கூறினார்.

ரகோகர், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங்கின் சொந்த ஊராகும், அவரது மகன் ஜெய்வர்தன் சிங் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com