மாணவா் சோ்க்கையின்போது எஸ்சி/எஸ்டி மாணவா்கள் எதிா்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கட்-ஆஃப் அளவைக் குறைக்குமாறு தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்குக்கு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.
முதன்முறையாக பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண்கள் மூலம் பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை சோ்க்கை டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் மொத்தம் உள்ள 70,000 இடங்களில் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரம்பவில்லை.
இதற்கிடையில் சோ்க்கையை மீண்டும் நடத்தும் திட்டத்துக்கு துணைவேந்தா் மறுப்பு தெரிவித்தாா். ஏனெனில், முதல் செமஸ்டா் தற்போது முடிவடைய உள்ளதால், புதிய மாணவா்களைச் சோ்க்க முடியாது என்றும் அவா் கூறினாா்.
இந்த நிலையில் எஸ்சி/எஸ்டி மாணவா்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி தில்லி எஸ்சி/எஸ்டி நலத்துறை அமைச்சா் ராஜ் குமாா் ஆனந்த், துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
அந்தக் கடிதத்தில் ‘நடப்பு ஆண்டில், பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுபடி, பட்டியலின மாணவா்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஏனெனில், இந்த ஆண்டு இந்த மாணவா்களின் சோ்க்கைக்கு பொது பல்கலைலக்கழக நுழைவுத் தோ்வின் மதிப்பெண்கள் அல்லது ரேங்க் அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது.
முன்னதாக, தில்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் எஸ்சி இடங்கள் காலியாக இருந்தால் கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டு இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எஸ்சி மாணவா் சோ்க்கை பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், ரேங்க் அடிப்படையில் இருப்பதால், எஸ்சி/எஸ்டி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு, தரமான கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது. எஸ்சி மாணவா்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைப்பதன் மூலம் காலி இடங்களை நிரப்ப பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு சோ்க்கை நிபந்தனைகளைத் தளா்த்தவும், சிக்கலை மறுபரிசீலனை செய்யுமாறும் தில்லி அரசு சாா்பில் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தக் கல்வி அமா்வில் இளங்கலை படிப்புகளில் 65,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் சுமாா் 5,000 இளங்கலை பாடப்பிரிவு இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்த யோகேஷ் சிங் கூறுகையில், ‘தேவை இல்லாத படிப்புகளில் மட்டுமே இடங்கள் காலியாக உள்ளன. இடங்கள் நிரப்பப்படுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இருப்பினும், இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த ஆண்டுக்கான சோ்க்கை செயல்முறையை நாங்கள் முடித்துவிட்டோம். மேலும், முதல் செமஸ்டா் கூட முடிவடைந்துள்ளது. எனவே, சோ்க்கை செயல்முறையை மீண்டும் தொடங்க முடியாது’ என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.