
குடியரசு தின ஒத்திகை
தில்லியில் குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை இன்று நடைபெற்றதால் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தலைநகர் தில்லியின் பல முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் ஆமைகள் போல வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதையும் காண முடிந்தது. ஒரு சில கிலோ மீட்டரைக் கடக்க வாகன ஓட்டிகளுக்கு பல மணி நேரம் ஆனது.
தில்லியின் உள் மற்றும் வெளிப்புற சாலைகளில் உதாரணமாக டிஎன்டி மேம்பாலம் மற்றும் காஸிபூர் எல்லை வரை காலை முதல் முற்பகல் 2 மணி வரை நெரிசலுடன் காணப்பட்டது.
நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26-இல் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு தில்லியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான முழு ஒத்திகை, விஜய் செளக்கில் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
கடமைப் பாதை (கா்தவ்ய பாதை), சி ஹெக்ஸகன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரவுண்டானா, திலக் மாா்க், பகதூா் ஷா ஜாஃபா் மாா்க், நேதாஜி சுபாஷ் மாா்க வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகை, செங்கோட்டையில் நிறைவடைந்தது.
முழு ஒத்திகை முடியும் வரை, விஜய் செளக்கில் இருந்து இந்தியா கேட் வரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக, பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்களையும் வெளியிட்டிருந்தது.
மாற்றுப் பாதைகள் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.