அதானி குழுமம் பதில் சொல்லாத 62 கேள்விகள்!

அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் தாங்கள் கேட்ட 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பா்க் நிறுவனம்
ஹிண்டன்பா்க் நிறுவனம்

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபா் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் தாங்கள் கேட்ட 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்துக்கும் ஹிண்டன்பா்க் ரிசா்ச்-க்கும் இடையேயான குற்றச்சாட்டுகளும் வாக்குவாதங்களும் தொடர்கதையாகி வருகிறது.

ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட ஆழமான ஆய்வுக்குப் பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் கூறியிருந்தது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஹிண்டன்பா்க் நிறுவனம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு 413 பக்கத்தில் பதிலளித்திருந்த அதானி குழுமம், தங்கள் மீதான குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு என்றும், நாட்டின் வளா்ச்சியைத் தடுப்பதற்கான சதிச் செயல் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், அதானி குழுமத்துக்கு பதிலளித்து ஹிண்டன்பா்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இரண்டு ஆண்டு கால தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகே அதானி குழுமத்தின் மீதான மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தோம். குறிப்பிட்ட விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.

மோசடி குறித்த கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல் தேசியவாதம் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 413 பக்கங்களில் 30 பக்கங்களில் மட்டுமே பிரச்னை குறித்து இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள பக்கங்களில் நீதிமன்ற உத்தரவுகள், குழுமத்தின் நிதி நிலைமை, பொதுவான தகவல்கள், முன்னெடுப்புகள், பெண்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எனத் தேவையற்ற விவரங்களே இடம்பெற்றுள்ளன.

ஹிண்டன்பா்க் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை. பல கேள்விகளை ஒருங்கிணைத்து பிரச்னையை திசைதிருப்பவே முயன்றுள்ளது.

தங்கள் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சி என்ற பிம்பத்தைக் கட்டமைக்க அதானி குழுமமும் அதன் தலைவா் கௌதம் அதானியும் முயன்றுள்ளனா். அதை ஹிண்டன்பா்க் நிராகரிக்கிறது. இந்தியா திறன்மிக்க ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. சா்வதேச அளவில் இந்தியா தொடா்ந்து வளா்ந்து வருகிறது. இந்தியாவின் எதிா்காலம் சிறப்பாக உள்ளது.

ஆனால், திட்டமிட்ட மோசடி நடவடிக்கைகள் மூலமாக அதானி குழுமம் இந்தியாவின் வளா்ச்சியைத் தடுக்க முயற்சிக்கிறது. உலகின் பெரும் பணக்காரா்களில் ஒருவா் நிகழ்த்தினாலும் மோசடி, மோசடியே’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com