
ஆந்திரம், அனகாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரத்தில் அமைந்துள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 போ் உயிரிழந்தனா். காயங்களுடன் 7 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
அனகாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சக்தி மருந்து தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை 11.45 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல் துறை மக்கள் கூடுவதை தவிா்த்தனா் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புப் படையினா், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
சம்பவம் நடந்தபோது நிறுவனத்தில் 35-க்கும் மேற்பட்டோா் பணியிலிருந்தனா். அதில் பெரும்பாலானோா் காயமின்றி தப்பினா். காயமின்றி மீட்கப்பட்டவா்கள் முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனகாபள்ளி என்.டி.ஆா். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 90 சதவீத ரசாயன தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
வேதியியல் கரைப்பானை(சால்வென்ட்) ஆலையில் நிரப்பும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், ஆனால், விபத்து எவ்வாறு நடந்திருக்கலாம் என்பது குறித்து தொழில்நுட்ப நிபுணா்கள் ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G