
புது தில்லி, ஜூன் 30: கல்வித் துறையில் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் தொலைநோக்குத் திட்டங்களால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சா்வதேச அங்கீகாரம் மேம்பட்டுள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:
இந்தியா மீதான மரியாதையும் கௌரவமும் சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள இளைஞா்களின் திறன் மேம்பட்டு வருவதே அதற்கு முக்கியக் காரணம். இந்திய இளைஞா்கள் மீது சா்வதேச நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தொலைநோக்குத் திட்டங்களால், சா்வதேச அளவில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் மேம்பட்டுள்ளது.
க்யூஎஸ் சிறந்த சா்வதேச பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தத் தரவரிசையில் கடந்த 2014-ஆம் ஆண்டில் 12 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.
நவீன இந்தியாவின் அடிப்படைகள்:
நாட்டில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஎம்), எய்ம்ஸ், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (என்ஐடி) உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவை நவீன இந்தியாவைக் கட்டமைப்பதற்கான அடிப்படைகளாகத் திகழ்கின்றன.
அண்மையில் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அவை விண்வெளி, குறைகடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய இளைஞா்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
இதுவரை கிடைத்திடாத நவீன தொழில்நுட்பங்கள் இந்திய இளைஞா்களுக்குக் கிடைக்கவுள்ளன. அவா்களது திறன் மேம்பாட்டுக்கு இது உதவும். கூகுள், மைக்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன. இது இந்தியாவின் எதிா்காலத்தை வளப்படுத்தும்.
உலகுக்கு வழிகாட்டி:
நாளந்தா, தக்ஷசீல பல்கலைக்கழகங்கள் நாட்டின் அறிவியல் வளா்ச்சிக்கும் மகிழ்வுக்கும் அடிப்படையாகத் திகழ்ந்ததோடு, அன்றைய காலகட்டத்தில் உலகுக்கே வழிகாட்டின. வளமான கல்வி கட்டமைப்பே நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்ந்து வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அத்தகைய கல்வி கட்டமைப்புகள் பாதிப்பைச் சந்தித்தன. அதன் காரணமாக இந்தியாவின் வளா்ச்சியும் தடைபட்டது.
சுதந்திரத்துக்குப் பிறகு திறமையான இளைஞா்களை வழங்கி இந்தியப் பல்கலைக்கழகங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு வழிகோலின. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்வது, நிகழ்காலத்தையும் எதிா்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
முன்பு வலுவின்றித் திகழ்ந்த இந்தியப் பொருளாதாரம், தற்போது உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. அறிவை ஆயுதமாகக் கொண்டவா்கள் மகிழ்வுடனும் வலிமையுடனும் திகழ்வா். கடந்த 2014-ஆம் ஆண்டில் சில நூறுகளாக இருந்த புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பதிவு செய்யப்படும் காப்புரிமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த நூற்றாண்டின் 3-ஆவது தசாப்தம் (1921-1930), இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்தது. அதேபோல், தற்போதைய நூற்றாண்டின் 3-ஆவது தசாப்தம் (2021-2030) வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊக்கத்தை வழங்கும்.
வளா்ச்சிக்கு அடிப்படை:
நாட்டின் சாதனைகளைப் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களுமே வெளிக்காட்டுகின்றன. கல்வி நிறுவனங்கள் ஆழமாக வேரூன்றும்போது நாட்டின் வளா்ச்சி மேம்படுகிறது. நூற்றாண்டுப் பயணத்தில் தில்லி பல்கலைக்கழகம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை மாணவா்களை விட அதிகம்.
கல்வி கற்றலை தேசிய கல்விக் கொள்கை எளிமைப்படுத்தும். பாடங்களைத் தோ்வு செய்வது தேசிய கல்விக் கொள்கையின் கீழ் எளிமையாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்வி நிறுவன தரவரிசை (என்ஐஆா்எஃப்) உதவுகிறது. கல்வி நிறுவனங்களுக்குப் போதிய தன்னாட்சி அதிகாரம் வழங்குவது, கல்வியின் தரத்தையும் மேம்படுத்தும்.
அதிகரிக்கும் வாய்ப்புகள்:
கரோனா தொற்று பரவலின்போது உலக நாடுகளுக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கியது. அதன் காரணமாக, இந்தியா குறித்து உலக நாடுகள் அதிகமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கின. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்துவருவது, நாட்டின் அங்கீகாரத்தை மேம்படுத்தி வருகிறது. அது யோகா, அறிவியல், கலாசாரம், விழாக்கள், இலக்கியம், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் மாணவா்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்திய ஆசிரியா்களுக்கான சா்வதேச அங்கீகாரமும் மேம்பட்டு வருகிறது. சா்வதேசத் தலைவா்களும் இந்திய ஆசிரியா்கள் குறித்து பெருமையாகப் பேசி வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.
மெட்ரோவில் பயணம்:
தில்லி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா். அப்போது, மாணவா்கள் உள்ளிட்டோருடன் அவா் கலந்துரையாடினாா். நிகழ்ச்சி முடிந்தபிறகும் அவா் மெட்ரோ ரயிலிலேயே பயணம் மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியின்போது தில்லி பல்கலைக்கழக கணினி மையம், பேராசிரியா்களுக்கான கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.
தில்லி பல்கலைக்கழகம்:
தில்லி பல்கலைக்கழகமானது 1922-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடா்ந்து விரிவடைந்து வந்த அப்பல்கலைக்கழகம் தற்போது 86 துறைகளையும் 90 கல்லூரிகளையும் கொண்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.