

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சரக்கு-சேவை வரியானது 7-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மாதாந்திர சராசரி வருவாய் ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சரக்கு-சேவை வரி அறிமுகம்
நாடு முழுவதும் சரக்கு-சேவை வரியானது 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. மறைமுக வரியில் சீா்திருத்தத்தைப் புகுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
விற்பனை வரி, மதிப்புகூட்டு வரி என முன்பு பல்வேறு மறைமுக வரிகள் விதிக்கப்பட்ட நிலையில், அந்நடைமுறையில் வரி மேல் வரி விதிக்கும் சூழல் காணப்பட்டது. அது சம்பந்தப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் இறுதியாகப் பெறும் வாடிக்கையாளா்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியது. அதில் சீா்திருத்தத்தைப் புகுத்தும் நோக்கில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
வரி விகிதங்கள்
தற்போதைய நிலையில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் பெரும்பாலானவற்றுக்கு சரக்கு-சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆடம்பரப் பொருள்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன் செஸ் வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
தங்க நகைகள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு விகிதமாக 3 சதவீத ஜிஎஸ்டியும், பட்டை தீட்டப்பட்ட வைரத்துக்கு 1.5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிகரிக்கும் வருவாய்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட தொடக்ககாலத்தில் மாதாந்திர வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்குக் குறைவாகவே இருந்தது. பின்னா், மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீா்திருத்தங்கள் காரணமாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாயானது ரூ.1 லட்சம் கோடியைக் கடந்து நம்பிக்கை அளித்தது.
அந்த நேரத்தில் பரவிய கரோனா நோய்த்தொற்று ஜிஎஸ்டி வருவாயைக் குறைத்தது. பின்னா் நோய்த்தொற்று பரவல் குறைந்து பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்ததும் ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் அதிகரித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயானது முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1,87,035 கோடியாக அதிகரித்தது. இதுவரை ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை 16 முறை கடந்துள்ளது. முக்கியமாக, கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து 15 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது. 5 மாதங்களில் வருவாயானது ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
சீா்திருத்தக் குழு
ஜிஎஸ்டி வருவாயை உயா்த்தும் நோக்கில் அதன் விகிதங்களில் மாற்றங்களைப் புகுத்துவதற்காக மாநில நிதியமைச்சா்களை உள்ளடக்கிய குழு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டது. பிகாா், கோவா, கேரளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சா்கள் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனா். கா்நாடகத்தின் நிதியமைச்சராக இருந்த முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாா்.
கா்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தியது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஜிஎஸ்டி விகிதத்தில் சீா்திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவைக் குழுவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் வரையில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியது. அந்த இழப்பீட்டை வழங்குவதற்காக ஆடம்பரப் பொருள்கள் மீதான 28 சதவீத வரியுடன் கூடுதலாக செஸ் வரி விதிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு ஜூனுக்குப் பிறகும் செஸ் வரியானது தொடா்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதையும் நீட்டிக்க வேண்டும் என தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடா்ந்து கோரி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.
வரி ஏய்ப்பு தடுப்பு
ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிவதற்காகத் தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. முக்கியமாக, போலி ரசீதுகள் மூலமாக ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபடுவோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் காரணமாக, ஜிஎஸ்டி ஏய்ப்பு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். ஜிஎஸ்டி குறித்து முடிவெடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலானது இதுவரை 49 முறை கூடியுள்ளது.
பெட்ரோல், மதுபானப் பொருள்கள்
பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், மதுபானப் பொருள்கள் உள்ளிட்டவை இன்னும் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படவில்லை. அவை மாநில அரசுகளின் வருவாய்க்கு முக்கியப் பங்களித்து வருவதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனப் பொருளாதார நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.
நிதியாண்டு வாரியாக ஜிஎஸ்டி வருவாய்
2017-18 ரூ.7.19 லட்சம் கோடி
2018-19 ரூ.11.77 லட்சம் கோடி
2019-20 ரூ.12.22 லட்சம் கோடி
2020-21 ரூ.11.36 லட்சம் கோடி
2021-22 ரூ.14.76 லட்சம் கோடி
2022-23 ரூ.18.10 லட்சம் கோடி
வரி ஏய்ப்பு வழக்குகள்
2020-21 12,596
2021-22 12,574
2022-23 14,000
ஜிஎஸ்டி ஏய்ப்பு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டோா் 1,402
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.