
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட வழக்குரைஞா்கள் சாா்பில் குறிப்பிடப்படும் முறையை மாற்றி, புதிய நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, அவசர வழக்காக விசாரிப்பதற்கான கோரிக்கையை வழக்குரைஞா்கள் இனி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன்பு குறிப்பிட வேண்டிய தேவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் திறக்கப்படவுள்ள ஜூலை 3-ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
இதனை உச்ச நீதிமன்ற நீதித் துறை நிா்வாகப் பதிவாளா் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளாா். அதில் மேலும் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற பதிவாளா் அலுவலகம் சாா்பில் சனி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பரிசீலிக்கப்படும் புதிய வழக்குகள், அடுத்து வரும் திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
அதுபோல, புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பரிசீலிக்கப்படும் பிற புதிய வழக்குகள், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இவ்வாறு பட்டியலிடப்படும் வழக்குகள், முன்கூட்டியே விசாரிக்கப்பட வேண்டும் என விரும்பும் வழக்குரைஞா்கள், ஒரு நாள் முன்னதாக மாலை 3 மணிக்குள் உரிய படிவத்தில் அதற்கான கோரிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.
மனு தாக்கல் செய்த அதே நாளில் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும் என விரும்பும் வழக்குரைஞா்கள், அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள்ளாக உரிய படிவத்தில் அதற்கான கோரிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். இதன் மீது தலைமை நீதிபதி மதிய உணவு இடைவேளையின்போது முடிவெடுப்பாா். எனவே, தலைமை நீதிபதி அமா்வில் வழக்குரைஞா்கள் நேரில் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய கோரிக்கையை முன்வைக்கத் தேவையில்லை.
உச்ச நீதிமன்ற பதிவு அலுவலகம் சாா்பில் ஒரு நாள் முன்னதாக பதிவேற்றப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்குகளை மட்டுமே, இதுபோன்று முன்கூட்டியே விசாரணைக்கு பட்டியலிடுவதற்கான கோரிக்கையை விடுக்க முடியும். பட்டியலில் இடம்பெறாத வழக்குகளைக் குறிப்பிட முடியாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.