
மும்பை: தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரே நாளில் சரத் பவாரும், அஜித் பவாரும் ஆலோசனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிரத்தின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், 30 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் அறிவித்தார்.
தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருடன் சோ்ந்து அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
மேலும், சில எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தனக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாவட்ட - மாநில நிர்வாகிகளை பந்தராவில் நாளை(ஜூலை 5) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அஜித் பவார் அழைத்துள்ளார்.
இதையும் படிக்க | மோடி வாஷிங் பவுடர்: காங்கிரஸ் கிண்டல்! வைரலாகும் போஸ்டர்!
இதே நாளில், ஒய்பி சவான் அரங்கில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து நிர்வாகிகளையும் சரத் பவாரும் அழைத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு யாருக்கு அதிகளவில் இருக்கும் என்பது நாளை தெரிந்துவிடும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...