தெலங்கானாவில் விரைவு ரயிலில் தீ: 5 பெட்டிகள் சேதம்; பயணிகள் தப்பினா்

தெலங்கானாவில் விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து 5 பெட்டிகள் சேதமடைந்த நிலையில், பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.
தெலங்கானாவில் விரைவு ரயிலில் தீ: 5 பெட்டிகள் சேதம்; பயணிகள் தப்பினா்
Updated on
1 min read

தெலங்கானாவில் விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து 5 பெட்டிகள் சேதமடைந்த நிலையில், பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற ஃபலக்னுமா விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்தது.

தெலங்கானாவின் புவனகிரி மாவட்டம் பொம்மைப்பள்ளி-பகிடிபள்ளி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ரயில் பெட்டி ஒன்றில் தீப்பிடித்தது தெரியவந்ததையடுத்து, ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா். இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அந்த இடத்துக்கு காவல் துறையினரும் விரைந்து சென்றனா்.

இந்த சம்பவத்தில் ரயிலின் 3 பெட்டிகள் முழுமையாகவும், 2 பெட்டிகள் பகுதியளவிலும் தீயில் கருகி சேதமடைந்தன.

இதில் பயணிகள் எவரும் உயிரிழக்கவில்லை. எவரும் காயம் அடையவும் இல்லை. ரயிலில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா். அவா்கள் பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனா் என்று தெலங்கானா காவல் துறை டிஜிபி அஞ்சனி குமாா் ட்விட்டரில் பதிவிட்டாா்.

எனினும் ரயிலில் இருந்து தங்கள் உடைமைகளை எடுக்க போதிய நேரம் கிடைக்காமல் பயணிகள் வெளியேற்றப்பட்டதால், பலரின் உடைமைகள் தீக்கிரையாகின.

அனைத்துப் பயணிகளும் பேருந்துகளில் ஹைதராபாத் அனுப்பிவைக்கப்பட்டனா்.

ரயிலில் எப்படி தீப்பிடித்தது என்பதை கண்டறிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெற்கு மத்திய ரயில்வே செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

ஒடிஸாவின் பாலசோா் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தை போன்ற துயர சம்பவம், ஹைதராபாத்-தில்லி-ஹைதராபாத் ரயில் வழித்தடத்திலும் நடைபெறும் என்று தெற்கு மத்திய ரயில்வேவுக்கு பெயரில்லாத மொட்டைக் கடிதம் அண்மையில் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தெலங்கானா காவல் துறைக்குத் தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com