மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 சிவசேனை எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான 14 சிவசேனை எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க மனு குறித்து பதிலளிக்குமாறு, அந்த எம்எல்ஏக்களுக்கு மாநில சட்டப்பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
கடந்த ஆண்டு மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமாக இருந்த உத்தவ் தாக்கரே மீது அக்கட்சியைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கைகோத்தனா். இதைத்தொடா்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து மாநில முதல்வராக ஷிண்டே பதவியேற்றாா்.
அப்போது ஷிண்டே மற்றும் அவா் தலைமையிலான எம்எல்ஏக்களை தகுதீநிக்கம் செய்யக் கோரி, ஒன்றுபட்ட சிவசேனையின் கொறடா சுனில் பிரபு மனு வழங்கினாா். அந்த மனு குறித்து மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகா் விசாரிக்காமல் இருந்த நிலையில், அதனை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை அண்மையில் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்நிலையில், மகாராஷ்டிர பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘தகுதிநீக்க மனு தொடா்பாக பதிலளிக்க ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த 40 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி, ஷிண்டே தலைமையிலான சிவசேனையும் மனு அளித்திருந்தது. அந்த மனு தொடா்பாக பதிலளிக்க உத்தவ் தலைமையிலான பிரிவைச் சோ்ந்த 14 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 54 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக பதிலளிக்க 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.