
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நட்புறவின் ஒரு பகுதியாக, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மாநிலத்தின் மிகவும் சுவையான அன்னாசிப்பழங்களை
ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தார்.
980 கிலோ எடை அளவிலான கியூ வகை அன்னாசிப்பழங்கள் சிட்டகாங்கில் உள்ள இந்திய உதவித் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக திரிபுரா தோட்டக்கலைத் துறை இயக்குநர் ஃபனிபூசன் ஜமாத்தியா தெரிவித்தார். அன்னாசிப்பழங்களை வங்கதேச பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் டாக்காவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர். 100 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட அன்னாசிப்பழங்கள் அகர்தலா-அகௌரா ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக அனுப்பப்பட்டன.
இதையும் படிக்க- அமெரிக்காவில் ஜெட் விமானம் விபத்து: 6 பேர் பலி
கடந்த மாதம் திரிபுரா முதல்வருக்கு வங்கதேச பிரதமர் வழங்கிய ஹரிபங்கா மாம்பழங்களுக்கு பதில் அன்னாசிப்பழங்கள் அனுப்பப்பட்டதாக ஜமாத்தியா கூறினார். திரிபுரா மாநிலம் முழுவதும் 8,800 ஹெக்டேர் மலைத் தோட்டங்களில் ஆண்டுதோறும் 1.28 லட்சம் டன் அன்னாசிப்பழங்களை உற்பத்தி செய்கிறது. மேலும் கியூ மற்றும் குயின் வகை அன்னாசிப்பழங்களை பல நாடுகளுக்கும் பல இந்திய மாநிலங்களுக்கும் திரிபுரா ஏற்றுமதி செய்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2018ஆம் ஆண்டு அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரிபுராவின் மாநிலப் பழமாக “குயின்” வகை அன்னாசிப்பழத்தை அறிவித்தார். அன்னாசிப்பழங்களைத் தவிர திரிபுரா, இங்கிலாந்து, ஜெர்மனி, துபாய், வங்கதேசம் மற்றும் பிற நாடுகளுக்கும், பல்வேறு இந்திய மாநிலங்களுக்கும் பலாப்பழம், புளி, கல் ஆப்பிள், வெற்றிலை, இஞ்சி ஆகியவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...