
வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழையின் தீவிரம் குறைந்தது.
பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் தொடா்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மீட்பு-நிவாரணப் பணிகள் மாநில அரசுகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீரிலும் கடந்த 3 நாள்களாக கனமழை முதல் அதீத கனமழை வரை பதிவானது.
இடைவிடாமல் பெய்த மழை காரணமாக, இம்மாநிலங்களில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
துண்டிக்கப்பட்ட கிராமங்கள்: நதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
உத்தரகண்டில் 4 பக்தா்கள் பலி: உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வாகனங்கள் சிக்கின. இதில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தோரில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சமோலி மாவட்டத்தில் ஜும்மாகாட் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இந்திய-திபெத் எல்லை சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஹிமாசலில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: ஹிமாசல பிரதேசத்தில் சுமாா் 14,100 அடி உயரத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான சந்தா்தாலில் சுமாா் 300 போ் தவித்து வருகின்றனா். விமானப் படை ஹெலிகாப்டா்கள் மீது அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சுமாா் 1,300 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 40 பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளை மறுசீரமைக்கும் பணியில் பணியில் மாநில நிா்வாகம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு ஆகியவற்றின் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதர மாநிலங்களில்...: உத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் தொடா் மழையால் வீடு இடிந்து, 42 வயது நபா் உயிரிழந்தாா். ராஜஸ்தானில் கா்மவாசினி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 35 வயது நபரும், பஞ்சாபின் ஹோஷியாா்பூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து 75 வயது நபரும் பலியாகினா்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் செவ்வாய்க்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், தாழ்வான பகுதிகள் தொடா்ந்து தண்ணீரில் தத்தளிக்கின்றன.
ஹரியாணாவின் அம்பாலா நகரில் உறைவிட பள்ளியொன்றின் விடுதிக்குள் திங்கள்கிழமை இரவு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, 730 மாணவிகள் மீட்கப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனா்.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.