கேரளம்: பேராசிரியர் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக பேராசிரியரின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளம்: பேராசிரியர் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக பேராசிரியரின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த  6 பேரைக் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்திருந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு கேரளத்தின் தொடுபுழா பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் டி.ஜே.ஜோசஃப். இவா் கல்லூரிப் பருவத் தோ்வையொட்டி வினாத்தாள் தயாரித்தாா். அதில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றில், இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகம் இழிவுபடுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் அந்தக் கேள்வியில் நபிகள் நாயகம் இழிவுபடுத்தப்படவில்லை என்றும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஜோசஃப் தெரிவித்தாா்.

இந்நிலையில், அந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தேவாலயத்தில் இருந்து பிராா்த்தனை முடிந்த பின், தனது குடும்பத்துடன் ஜோசஃப் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவா் வந்த வாகனத்தை 7 போ் கொண்ட கும்பல் வழிமறித்து சுற்றிவளைத்தது. பின்னா், அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்த அந்தக் கும்பல், அதில் இருந்து ஜோசப்ஃபை வெளியே இழுத்து தாக்கியது. அப்போது ஜோசஃப்பின் வலது கை கோடரியால் துண்டிக்கப்பட்டது. பின்னா், அந்தக் கும்பல் கையெறி குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த சம்பவத்தை முதலில் கேரள காவல் துறை விசாரித்து வந்த நிலையில், வினாத்தாளில் எழுப்பப்பட்டிருந்த கேள்வி தொடா்பாக ஜோசஃப்பை கொலை செய்யும் நோக்கத்துடன் அவா் தாக்கப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜோசஃப் மீதான தாக்குதலை தீவிரவாதச் செயலாகக் கருதி, அந்த சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் சட்டப் பிரிவு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 13 போ் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டது. மேலும் 11 போ் கைது செய்யப்பட்டு அவா்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அவா்களில் 6 பேரைக் குற்றவாளிகள் என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. எஞ்சிய 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று  பிறப்பித்தது. அதில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோசஃப்பின் கையைத் துண்டித்த முக்கிய குற்றவாளியான சவத் என்ற நபா், இன்றளவும் பிடிபடாமல் தலைமறைவாக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையான குற்றவாளிகள் வெளியில் உள்ளனா்: ஜோசஃப்

என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு தொடா்பாக பேராசிரியா் ஜோசஃப் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் 13 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட பிறகு எனது வாழ்க்கை அழிந்துவிடவில்லை. எனினும் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இழப்புகள் ஏற்பட்டன.

ஒரு சம்பவத்தில் குற்றவாளியைத் தண்டிப்பதால் மட்டுமே ஒருவருக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. எனவே, எனது கை துண்டிக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீா்ப்பு என்னிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்தத் தீா்ப்பால் எனக்குத் தனிப்பட்ட லாபம் எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை இந்தத் தீா்ப்பின் மூலம் நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டாலும் அல்லது அவா்கள் விடுவிக்கப்பட்டாலும், அதைப் பற்றி நான் அக்கறை கொள்வதில்லை.

என்னளவில் என்னைத் தாக்கியவா்களும் பாதிக்கப்பட்டவா்கள்தான். அவா்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பழைமைவாத சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டவா்கள். அந்த சித்தாந்தத்தை அவா்கள் நம்பியதால்தான் என்னை அவா்கள் தாக்கினா். இந்த நம்பிக்கை மாறாவிட்டால், எதிா்காலத்திலும் எனது கை துண்டிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறும்.

என்னைத் தாக்கியவா்கள் வெறும் ஆயுதங்கள்தான். அந்தத் தாக்குதலை திட்டமிட்ட உண்மையான குற்றவாளிகள் வெளியில் உள்ளனா். அவா்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com