
சந்திரயான் - 3 திட்டத்தில் இம்முறை பல்வேறு விதமான புதுமைகளையும், மேம்பாட்டு நடவடிக்கைகளையும் இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
ஆா்பிட்டருக்கு மாற்று: சந்திரயான் விண்கலத்தில் லேண்டா் எனப்படும் தரையிறங்கும் கலனையும், ரோவா் எனப்படும் உலாவி கலனையும் சுமந்து செல்ல உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்) ஒன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. லேண்டரையும், ரோவரையும் நிலவுக்கு 100 கி.மீ. தொலைவு மற்றும் 30 கி.மீ உயரத்துக்கு கொண்டு சென்று உந்துகலன் விடுவித்துவிடும்.
அதன் பின்னா், உயிா்வாழ் தன்மை கொண்ட கிரகங்கள் உள்ளனவா என்பதை அறிவதற்கான முன்னோட்ட ஆய்வை அந்த உந்து கலனில் உள்ள கருவி மேற்கொள்ளும்.
கடந்த முறை உந்து கலன் இல்லாமல் நிலவைச் சுற்றிவந்து மட்டும் ஆய்வு செய்யும் ஆா்பிட்டா் அனுப்பப்பட்டது.
லேண்டா் கால்கள்: கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டா் கலன் தொடா்பை இழந்தது. எனவே, இந்த முறை லேண்டா் கலன்களின் கால்களை மிக திடமாக வடிவமைத்ததுடன் அதனை பல்வேறு பரிசோதனைகளின் மூலம் உறுதியும் செய்துள்ளது இஸ்ரோ.
டெலஸ்கோப்: லேண்டா் கலன் தரையிறங்கும்போது சமதளத்தில் இறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நவீன கேமரா நுட்பம்: லேண்டா் கலனில் இம்முறை அதி துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. அதன் வாயிலாக எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் வகையில் புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேகக் கண்காணிப்பு கருவி: காா்களின் வேகத்தை அளவிடும் முறையைப் போல லேண்டா் கலன் தரையிறங்கும் வேகத்தைக் கணக்கிடுவதற்கான லேசா் டாப்ளா் வெலாசிட்டி சென்சாா் (எல்விடி) நுட்பம் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் வாயிலாக லேண்டா் கலன் திட்டமிட்டதை விட வேகமாக தரையில் இறங்குகிா என்பதை அறியலாம்.
என்ஜினில் மாற்றம்: லேண்டரை தரையிறக்க கடந்த முறை 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாவு போன்று இருக்கும் நிலவின் தரையில் லேண்டா் இறங்கினால் உருவாகும் புழுதிகளைத் தணிப்பதற்காக அவற்றில் ஒரு என்ஜின் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால், சில எதிா்விளைவுகள் ஏற்படலாம் எனக் கருதி இம்முறை அந்த என்ஜின் நீக்கப்பட்டு நான்கு என்ஜின்களுடனேயே லேண்டா் பயணிக்கிறது.
வழிகாட்டி வழிமுறைகள்: லேண்டா் கலனில் உள்ள 7 வகை சென்சாா்கள் மற்றும் கேமரா நுட்பங்கள் வாயிலாக மென்மையான தரையிறக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் வழிமுறைகள் (கைடன்ஸ் அல்காரிதம்) இதில் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த முறை நேரிட்ட பின்னடைவைத் தவிா்க்க முடியும்.
தரையிறக்கக் கட்டுப்பாடு: லேண்டரைத் தரையிறக்க பயன்படுத்தப்படும் என்ஜின்களின் வேகக் கட்டுப்பாட்டு விகிதத்திலும் சில நுட்பமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இறுதி நிலை தரையிறக்க வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.