
புதுதில்லி: சிட்னியில் இருந்து தில்லி செல்லும் விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதிகாரியின் கன்னத்தில் அறைந்து, திட்டியதால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஜூலை 9 ஆம் தேதி சிட்னியிலிருந்து தில்லிக்கு ஏ1-301 விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் பயணி ஒருவர் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமான எச்சரிக்கைகளை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதில் விமான ஊழியர் ஒருவரும் அடங்குவர்.
ஏர் இந்தியா அதிகாரி தனது சக பயணியின் உரத்த சத்தத்தை சரி செய்யத் தொடங்கியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதிகாரியின் கன்னத்தில் அறைந்து, திட்டினார். இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | ஆம் ஆத்மியின் பொறுப்பின்மையே தில்லி வெள்ளத்துக்கு காரணம்: பாஜக
இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சிவில் ஏவியேஷனுக்கு (டிஜிசிஏ) தெரிவிக்கப்பட்டது.
விமானம் தில்லியில் பத்திரமாக தரையிறங்கியதும், அந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அந்த பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விமானங்களில் அடிக்கடி பிரச்னைக்குரிய பயணிகளின் நடத்தையை எடுத்துக்காட்டும் பல சமீபத்திய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
குற்றம் சாட்டப்பட்ட பயணி அல்லது தாக்குதலுக்கு ஆளான அதிகாரி சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...