
பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன.
அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் இன்று பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாவது நாள் கூட்டத்தில் சரத்பாரும் அவரது மகள் சுப்ரியா சுலேவும் பங்கேற்க உள்ளனர்.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...