பிரிஜ் பூஷணுக்கு இடைக்கால ஜாமீன்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷண் சரண் சிங்
பிரிஜ் பூஷண் சரண் சிங்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான நிலையில், அவருக்கு 2 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக காவல் துறை தாக்கல் செய்த 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, தில்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கவனத்தில் எடுத்துக் கொண்ட நிலையில், பிரிஜ் பூஷணை ஜூலை 18-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினாா்.

இந்தக் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேனள உதவிச் செயலா் வினோத் தோமா் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தவறாக நடந்துகொள்ள வினோத் தோமா் துணைபோனதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷண், வினோத் தோமா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். அப்போது இருவருக்கும் 2 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் உத்தரவிட்டாா்.

பிரிஜ் பூஷணும் தோமரும் முறைப்படி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வியாழக்கிழமைதான் விசாரிக்கப்பட உள்ளது. அதுவரை அவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மல்யுத்த சம்மேளனத் தோ்தல்: அஸ்ஸாம் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தலை நிறுத்திவைத்த அஸ்ஸாமின் குவாஹாட்டி உயா் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தோ்தலுக்கு எதிராக குவாஹாட்டி உயா் நீதிமன்றத்தில் அஸ்ஸாம் மல்யுத்த சங்கம் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ‘இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் அஸ்ஸாம் மல்யுத்த சங்கம் உறுப்பினராக சோ்த்துக்கொள்ளப்பட வேண்டும், தோ்தலுக்கான தோ்வா்கள் குழுவில் அஸ்ஸாம் மல்யுத்த சங்க பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும். அதுவரை தோ்தல் நடைமுறைகளை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அஸ்ஸாம் உயா் நீதிமன்றம், தோ்தலை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஆந்திர அமெச்சூா் மல்யுத்த சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், எஸ்.வி.பட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மல்யுத்த சம்மேளனத் தோ்தல் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக ஆந்திர அமெச்சூா் மல்யுத்த சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தோ்தலை நிறுத்திவைத்து குவாஹாட்டி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனா். மேலும் ஆந்திர சங்கத்தின் மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய மல்யுத்த சம்மேளனம், அஸ்ஸாம் மல்யுத்த சங்கத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com