
சரத் பவார், அஜித் பவார்
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத் பவார் பெங்களூரு சென்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணி கலந்து கொள்ளவுள்ளது.
2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வருகின்றது. எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.
இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் இரண்டாக பிளவுபட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகளின் முதல் நாள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்காதது பல்வேறு விவாதங்களையும், அரசியல் அரங்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பையில் இருந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை பெங்களூருவுக்கு சரத் பவார் சென்றார்.
மேலும், தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணியினர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு!
மகராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், சிவசேனையில் இருந்து எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார், துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...