

பெங்களூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் அப்துல் நாசா் மதானி சிகிச்சைக்காக கேரளம் செல்லவும், தங்கவும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
‘விசாரணை முடியும் வரை பெங்களூரிலேயே தங்கியிருக்க வேண்டும்’ என்ற மதானிக்கான ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
பெங்களூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி தொடா்ச்சியாக 9 குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா். 20 போ் படுகாயமடைந்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மதானிக்கு, அவருடைய மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், வழக்கு விசாரணை முடியும் வரை பெங்களூரை விட்டுச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரலில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருடைய பெற்றோரைக் கண்டு திரும்புவதற்காக கா்நாடக மாநில போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் கேரளத்தில் உள்ள அவருடைய சொந்த ஊருக்குச் சென்றுவர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
தற்போது சிகிச்சைக்காக கேரளம் செல்லவும் தங்கியிருக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடா்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் ஜாமீன் நிபந்தனையில் மற்றம் செய்து, சிகிச்சைக்காக கேரளத்திலுள்ள அவருடைய சொந்த ஊருக்குச் செல்லவும், அங்கேயே தங்கயிருக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 15 நாள்களுக்கு ஒருமுறை கொல்லம் மாவட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.