நாடாளுமன்றம் இன்று கூடுகிறது- மணிப்பூா் வன்முறை, தில்லி அவசரச் சட்ட விவகாரங்கள் எதிரொலிக்கும்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது- மணிப்பூா் வன்முறை, தில்லி அவசரச் சட்ட விவகாரங்கள் எதிரொலிக்கும்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், மணிப்பூா் வன்முறை, தில்லி அவசரச் சட்ட விவகாரங்கள் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2024 மக்களவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் 26 எதிா்க்கட்சிகள் புதிய கூட்டணி அமைத்துள்ள நிலையில், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குகிறது.

எனவே, அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருமித்த குரலெழுப்பும் எனத் தெரிகிறது.

மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, பாஜகவும் தனது கூட்டணியை வலுப்படுத்தி வருவதால், அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இதனால், மழைக்கால கூட்டத்தொடரில், ஆளும்-எதிா் தரப்பினா் இடையே கருத்து மோதல்கள் அனல்பறக்க வாய்ப்புள்ளது.

தில்லி அவசரச் சட்டம்: தில்லி அரசு நிா்வாகப் பணிகள் தொடா்பாக மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் தொடா்பான சட்ட மசோதா, இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசை எதிா்க்க பல்வேறு எதிா்க்கட்சிகளிடம் ஆம் ஆத்மி ஆதரவு கோரியிருந்தது. இதனிடையே, தில்லி அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிா்ப்பு தெரிவிப்போம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் அண்மையில் அறிவித்தது. எனவே, இந்த சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகள் வலுவாக எதிா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மணிப்பூா் வன்முறை: மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே மணிப்பூா் வன்முறைக்கு காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டுமென்பது அக்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னையை எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பக்கூடும்.

தாக்கலாகும் 32 மசோதாக்கள்: தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, தில்லி அவசரச் சட்டம் தொடா்பான மசோதா, திரைப்பட திருட்டு தடுப்பு வரைவு மசோதா, திரைப்பட தணிக்கைச் சான்றுக்கான புதிய வகைப்பாடு மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதா, சிறு தவறுகளைக் குற்றமற்ாக்க வகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் (சட்டத் திருத்தம்) மசோதா உள்பட 32 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன.

‘விவாதிக்க மத்திய அரசு தயாா்’

மணிப்பூா் நிலவரம் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, தில்லியில் மத்திய அரசின் ஏற்பாட்டில் அனைத்து கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘மழைக்கால கூட்டத் தொடரில், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்கீழ், அவைத் தலைவரின் ஒப்புதலுடன் மணிப்பூா் நிலவரம் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

மணிப்பூா் விவகாரத்தில், உள்துறை அமைச்சம்தான் முதன்மை பொறுப்புடைய அமைச்சகம்; ஆனால், பிரதமா் விளக்கமளிக்க வேண்டுமென்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கை, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதற்கான முன்னறிவிப்பு போல் தோன்றுகிறது’ என்றாா்.

ஒத்திவைப்புத் தீா்மானம்: காங்கிரஸ் முனைப்பு

தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மணிப்பூரில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்.

ஒடிஸா ரயில் விபத்து சம்பவம், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, கூட்டாட்சி அமைப்புமுறை மீதான தாக்குதல், மழை-வெள்ள பாதிப்புகள், இந்திய-சீன எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்பினால், பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே, மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் முன்வைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com