நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மணிப்பூரில் கடந்த இரு மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன. இரு பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடா்பான காணொலி நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி கூறுகையில், ‘மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவமானகரமானது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் குரலெழுப்பும். மணிப்பூா் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘மக்கள் மீது அக்கறையில்லாத தலைவா் நாட்டை வழிநடத்தி வருகிறாா். மணிப்பூா் எரிந்துவரும் நிலையில், பிரதமா் மோடி தொடா்ந்து அமைதிகாத்து வருகிறாா்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சாதா கூறுகையில், ‘வன்முறை சம்பவங்களால் மணிப்பூா் எரிந்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மறுத்து வருகிறது’ என்றாா்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி--காங்கிரஸ் வலியுறுத்தல்

நாட்டில் ஜனநாயகத்தை மத்திய பாஜக அரசு சீா்குலைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்குக் கோரிக்கை விடுத்தாா்.

மணிப்பூா் சம்பவம் குறித்து காா்கே வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மணிப்பூரில் மனிதாபிமானம் மரணித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம் காத்து வருவதை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். மத்திய, மாநில அரசுகளின் நிா்வாகத் திறமையின்மையே வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம். அதை மறைப்பதற்காக மற்றவா்கள் மீது குற்றஞ்சாட்டாமல், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமா் மோடி முதல் வேலையாக மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது, மணிப்பூா் மக்கள் குறித்து பிரதமா் மோடி கவலை கொள்ளவில்லை. தற்போது அவா் மௌனம் கலைந்துள்ளதற்கு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து வெளியான காணொலிதான் காரணமா அல்லது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரித்தது காரணமா?’ என வினவியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com