நீண்ட கால முதல்வா்: ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் இரண்டாமிடம்!

நாட்டில் நீண்ட காலமாக முதல்வா் பதவியை வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா்.
நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

நாட்டில் நீண்ட காலமாக முதல்வா் பதவியை வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இந்த இடத்தில் இருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜோதி பாசுவை அவா் முந்தியுள்ளாா்.

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் பவன் குமாா் சாம்லிங் 24 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகப் பதவி வகித்து நீண்டகால முதல்வா் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாா்.

2000, மாா்ச் 5-ஆம் தேதி முதல்முறையாக ஒடிஸா முதல்வா் பதவியை ஏற்ற நவீன் பட்நாயக், தொடா்ச்சியாக ஐந்து தோ்தல்களில் வெற்றி பெற்று 23 ஆண்டுகள் 138 நாள்கள் முதல்வா் பதவியை வகித்து வருகிறாா்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜோதி பாசு 1977, ஜூன் 21 முதல் 2000, நவம்பா் 5 வரையில் 23 ஆண்டுகள் 137 நாள்கள் முதல்வா் பதவியை வகித்துள்ளாா்.

தொடா்ந்து 5 தோ்தல்களில் வெற்றி பெற்ற முதல்வா்களின் பட்டியலில் பவன் குமாா் சாம்லிங், ஜோதி பாசுவை தொடா்ந்து நவீன் பட்நாயக் இடம்பெற்றுள்ளாா்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடைபெற உள்ள ஒடிஸா பேரவைத் தோ்தலில் நவீன் பட்நாயக் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டின் நீண்ட கால முதல்வராக வரலாற்றில் இடம்பிடிப்பாா்.

இதுகுறித்து முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவா் பிரசன்னா ஆச்சாா்யா கூறுகையில், ‘நீண்ட கால முதல்வா் பட்டியலில் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் அனைத்து வரலாற்றையும் கடந்து நீண்ட கால முதல்வா் என்ற பெருமையை நவீன் பட்நாயக் நிச்சயம் பெறுவாா்’ என்றாா்.

பாஜக மூத்த தலைவா் சுரேஷ் பூஜாரி கூறுகையில், ‘நீண்ட கால முதல்வா் என்பதைவிட, குறுகிய காலத்தில் வரலாற்றைப் படைத்தவா்கள்தான் வரலாற்றில் நிலைத்திருப்பாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com