

ஐஆா்சிடிசி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் முடங்கியதால் பொதுமக்கள் பலா் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.
தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்த பிரச்னை பின்னா் சரி செய்யப்பட்டுவிட்டதாக ஐஆா்சிடிசி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐஆா்சிடிசி மட்டுமல்லாமல் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை வாங்க உதவும் யுடிஎஸ் செயலி, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் ஆகியவையும் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் செயல்படவில்லை. இது ரயில் நிலையங்களுக்கு நேரில் வந்து இயந்திரங்களில் பயணச்சீட்டு எடுக்க முயன்ற பயணிகளுக்கு பிரச்னையாக அமைந்தது.
அதே நேரத்தில் அமேசான், மேக் மை டிரிப் உள்ளிட்ட பிற இணையதளங்கள் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடிந்தது.
இது தொடா்பாக மத்திய ரயில்வே செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘அதிகாலை 2.56 முதல் பிற்பகல் 1.28 வரை ஐஆா்சிடிசி இணையதளம், செயலியில் பிரச்னை இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டது. ரயில்வே தகவல்தொழில்நுட்பக் குழுவினா் இணையதளத்தில் இருந்த பிரச்னையை சரி செய்தனா்.
இந்த பிரச்னை தொடா்பாக ஐஆா்சிடிசி செயலியில் முன்பதிவு செய்த பயணி ஒருவா் கூறியதாவது:
செயலியில் ரயில் முன்பதிவு செய்ய இணையவழியில் பணத்தை செலுத்திய பிறகு, முன்பதிவு தோல்வியடைந்ததாக காட்டியது. அதே நேரத்தில் பணம் வங்கிக் கணக்கில் இருந்து சென்றுவிட்டது. இவ்வாறு 5 முறை முயற்சி செய்துமே ஒவ்வொரு முறையும் முன்பதிவுக் கட்டணம் மட்டும் பிடிக்கப்பட்டது, ஆனால், பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.