மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!

தில்லி: மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மாா்ச் 29-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஒப்புதலை பெற்ற நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்ப்பும், மத்திய அரசின் விளக்கமும்..

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு சூழலியல் ஆா்வலா்களும், பழங்குடியினரும், இமயமலைப் பகுதிகளில் வசிப்போரும் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மத்திய அரசால் ‘வனம்’ என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இனி வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும் என திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உச்சநீதிமன்றம் கடந்த 1996-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளதாக சூழலியல் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அகராதியில் ‘வனம்’ என்பதற்கு என்ன பொருளோ, அவை அனைத்துக்கும் அச்சட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்ததை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

அதே வேளையில், அங்கீகரிக்கப்படாத பகுதிகளையும் ‘வனம்’ என்ற வரையறைக்குள் கொண்டு வந்தால், தேயிலை உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோருக்கு தேவையற்ற சந்தேகம் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், நாட்டில் பசுமைப் பகுதிகளின் பரப்பை அதிகரிப்பதற்குத் தடையாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாகவே, அத்தகைய திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

விலக்களிக்கப்படும் பகுதிகள்:

சா்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து 100 கி.மீ. வரை உள்ள 10 ஹெக்டோ் அளவிலான வனப் பரப்புகள், வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்படாது என திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஹிமாசல், உத்தரகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தற்போது சாலை, அணை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு வனப் பாதுகாப்பு திருத்த மசோதா வெளிப்படையாக அனுமதி அளிப்பதாகவும், அது இமயமலைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றும் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மேலும், இடதுசாரி பயங்கரவாதம் காணப்படும் பகுதிகளில் 5 ஹெக்டோ் அளவிலான வனப் பரப்புகளுக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பழங்குடியினருக்கான பள்ளிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது வனப் பகுதிகள் மீது பழங்குடியினா் கொண்டுள்ள உரிமைகளைப் பெருமளவில் பாதிக்கும் என ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். வனப் பகுதிகளுக்கு நடுவே மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com