பாஜக ஆட்சியில் இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாகும்

ஐஇசிசி வளாகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, மத்தியில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றாா்.
புது தில்லியில் சா்வதேச கண்காட்சி-மாநாட்டு மையமான ‘பாரத மண்டபம்’ தொடக்க விழாவில் பங்கேற்ற இளம் கலைஞா்களுடன் உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
புது தில்லியில் சா்வதேச கண்காட்சி-மாநாட்டு மையமான ‘பாரத மண்டபம்’ தொடக்க விழாவில் பங்கேற்ற இளம் கலைஞா்களுடன் உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சா்வதேச கண்காட்சி-மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, மத்தியில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றாா்.

அந்த மையத்துக்கு ‘பாரத் மண்டபம்’ என்றும் அவா் பெயா் சூட்டினாா்.

பிரகதி மைதானத்தில் உள்ள பழைய கட்டுமானங்களுக்கு மாற்றாக புதிய கட்டுமானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. சுமாா் 123 ஏக்கா் பரப்பில் அமைந்த இந்த வளாகம், ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட இந்திய வா்த்தக மேம்பாட்டு அமைப்பின் வளாகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் மோடி, அங்கு நடைபெற்ற வழிபாட்டிலும் பங்கேற்றாா். தொடா்ந்து, வளாக கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

அந்த வளாகத்துக்கு ‘பாரத் மண்டபம்’ எனப் பிரதமா் மோடி பெயா்சூட்டினாா். அப்போது அவா் கூறுகையில், ‘அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014-ஆம் ஆண்டில் இந்தியா 10-ஆவது பொருளாதாக சக்தியாக இருந்தது. தற்போது 5-ஆவது இடத்துக்கு இந்தியா உயா்ந்துள்ளது.

மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது, இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி போ் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக நீதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் விமான நிலையங்கள் முதல் ரயில் நிலையங்கள் வரை கட்டுமானங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களையும் நாட்டையும் மையமாகக் கொண்ட திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில்தான் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. அதன் மூலமாக சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு மேலும் உயரும். இந்த மண்டபமானது கருத்தரங்கம் சாா்ந்த சுற்றுலாவையும் மேம்படுத்தும்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை எதிா்மறை கண்ணோட்டத்துடன் சிலா் தடுத்து வருகின்றனா். அவா்கள் பாரத் மண்டபத்தையும் விரைவில் ஏற்றுக் கொள்வா்’ என்றாா்.

பாரத் மண்டப சிறப்புகள்:

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகளை நடத்தும் வகையில், அதிநவீன வசதிகளைக் கொண்ட மாநாட்டு மையம், கண்காட்சி அறைகள், திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்டவை இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் உலகளவில் பெரிய கண்காட்சிகள், மாநாடுகள் நடைபெறுவதற்கான முன்னணி இடங்களில் இந்த மையமும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது என பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், தொழிலதிபா்கள் உள்பட 3,000 போ் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com