இன்று நள்ளிரவு நிலவின் வட்டப்பாதைக்குள் நுழையும் சந்திரயான்-3

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நள்ளிரவு 12 - 1 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு நிலவின் வட்டப்பாதைக்குள் நுழையும் சந்திரயான்-3

நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நள்ளிரவு 12 - 1 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்த மிக முக்கிய பயணம் இன்று நள்ளிரவில் தொடங்குகிறது. புவி வட்டப் பாதையிலிருந்து, நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திரயான் நுழைய  28 முதல் 31 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை இந்த விண்கலம் 51 மணி நேரத்தில் அடையும் என்று கூறப்படுகிறது. நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தொலைவு என்பது 3.8 லட்சம் கிலோ மீட்டர். ஒவ்வொரு நாளும், நிலவும் பூமியும் இருக்கும் இடங்களைப் பொருத்து இவற்றுக்கு இடையேயான தொலைவு மாறுபடும்.

நிலவின் தென் துருவத்துக்கு மிக அருகில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை உயா்த்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலம் புவிக்கு அருகே ஒவ்வொரு முறை சுற்றிவரும் போதும் அதிலுள்ள உந்து விசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தொலைவு தற்போது ஐந்தாவது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் அதிகரிக்கப்பட்டது.

அதன்படி குறைந்தபட்சம் 236 கிமீ தொலைவும், அதிகபட்சம் 1,27,609 கிமீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தித் தள்ளப்படும். அதன்பின்னா், திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com