
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவி ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஜூன் 2ஆம் தேதி இரவு மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில் விபத்து நேரிட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில், 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பயணிகள் சிக்கியுள்ளனர். இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் படையில் விமானப் படையினரும் ஈடுபட மத்திய ரயில்வே துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவர்களுக்கு அழைப்பு:
விபத்து நேரிட்டுள்ள பகுதிக்கு பல பகுதிகளிலிருந்து மருத்துவர்களுக்கு அழைபு விடுக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற மருத்துவர்கள் பணிக்கு வர ஒடிசா அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.
உதவி எண்கள்:
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பயணிகள், ரயிலில் பயணித்தவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்க இந்த வசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.