பாலாசோர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மாவட்ட மருத்துவமனைகளில் குவிக்கப்பட்டிருப்பதால், மருத்துவமனைகள் போர்க்களம் போல காணப்படுகின்றன.
ஒடிசாவைச் சேர்ந்த 650 பேர் காயமடைந்த நிலையில், பாலாசோர் மாவட்ட மருத்துவமனை மற்றும் சோரோ மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் கொண்டு செல்லப்பட்டனர்.
காயத்துடன் வரும் நோயாளிகள் பலருக்கும் படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திண்டாடி வந்த நிலையில், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டு சிகிச்சை அளிக்க மொழிப் பிரச்னையும் பெரிய இடையூறாக அமைந்துவிட்டது.
பாலாசோர் மருத்துவமனையில் மட்டும் இன்று மதியம் வரை 526 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் பலரும், நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். தங்கள் வாழ்நாளில் இப்படியொரு சிக்கலை சந்தித்ததேயில்லை என்கிறார்கள் மருத்துவ ஊழியர்கள்.
இரவிலிருந்து தொடர்ந்து அனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 64 நோயாளிகள் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். வெறும் 60 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் சிகிச்சை அறுவைசிகிச்சை செய்யப்பட்ட ரயில் பயணிகள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மருத்துவமனையில் ரத்த தானம் அளிக்க குவிந்துள்ளனர். இரவு முதல் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர். இதோடு, இளைஞர்கள் பலரும் தாங்களாக முன்வந்து காயமடைந்தவர்களுக்கு உதவவும், ரத்த தானம் அளிக்கவும் மருத்துவமனைகளில் திரண்டிருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தின் மற்றொரு பக்கத்தில் ஏராளமான உடல்கள் வெள்ளை நிற துணி போர்த்தப்பட்டு, உறவினர்கள் வந்து அடையாளம் காட்டுவதற்காக கிடத்திவைக்கப்பட்டிருக்கிறது.