
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் நேற்று (ஜூன் 3) விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஒடிசா ரயில் விபத்து இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரயில் விபத்து: மம்தா பானர்ஜி
இந்த நிலையில், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்: இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் பிரான்ஸ் உறுதியாக நிற்கும். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரான்ஸ் உங்களுடன் துணை நிற்கும். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விரும்புகிறேன்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா: ஒடிசா ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...