

ஒடிகா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து, சேதமடையாத பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு - ஹௌரா அதிவிரைவு ரயில் புறப்பட்டு ஹௌரா சென்றடைந்தது.
பெங்களூரு - ஹௌரா அதிவிரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், அதனால், அந்தப் பெட்டிகளில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பியதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தவர்கள்தான் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் முடிந்த நிலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. ரயில் விபத்தில் 261 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர். கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹௌரா ரயில் மூன்றும் விபத்தில் சிக்கின. இதில் 17 ரயில் பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளன.
இதில் ஹௌரா என்ற ரயிலின் பொதுப்பெட்டி மட்டுமே விபத்தில் சேதமடைந்துள்ளது. இதில் பயணித்த பாதிக்கப்பட்ட பயணிகளின் அடையாளம் காண்பதற்கு சற்று நேரம் எடுக்கும் என்பதால், அதிகாரிகள் அந்தப் பணியையும் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே பாலாசோர் பகுதியில் நின்றிருக்கும் ரயில் பயணிகளை ஹௌரா கொண்டு செல்வதற்காக சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது. இதற்கிடையே, விபத்தில் சிக்கி சேதமடையாத ரயிலின் பெட்டிகள் குறைந்த வேகத்தில் இயக்க அனுமதி பெற்று, பயணிகளுடன் ஹெளரா புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.