ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 70-ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 70-ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில், 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. அதில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர். 

ஒடிசா விரைகிறார் உதயநிதி

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்துக்கு நாளை (ஜூன் 3) விரைகின்றனர். இதனால், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அவர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் ஒடிசா விரைகிறது.

தயார் நிலையில் 3 மருத்துவமனை

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், சென்னையில் 3 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதவி எண்கள்:

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

அவசர உதவி மையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவி ரயிலில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பயணிகள், ரயிலில் பயணித்த மற்ற பயணிகள் விவரங்கள் குறித்த தகவல்களுக்கு இந்த அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அவசர உதவி மையத்தை அணுகி வேண்டிய தகவல்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல்களை அளிக்க டிஜிபி அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com