
கோப்புப் படம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் பழங்குடியின பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இடுக்கி - எர்ணாகுளம் எல்லை பகுதியில் உள்ள இளம்புலஸ்ஸரி சேர்ந்த பழங்குடியின பெண் மாலு(25), என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் இல்லாததால், அங்குள்ள ஜீப் ஒன்றில் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே, ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து, அவர் அடிமாலியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள இரும்புபாலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரசவ வலி அதிகமான நிலையில் மருத்துவமனையில் இருந்து 3 கி.மீ தொலைவிற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கணவரைத் தவிர வேறுயாரும் உதவிக்கு இல்லாத நிலையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து அடிமாலி தாலுகா மருத்துவமனை அருகே இருந்த மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.
இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதாம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நான் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் தாயும், குழந்தையும் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டேன், உடனே மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவித்தேன். உடனடியாக அவர்கள் அடிமாலி மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மருத்துவர்கள், உதவியாளர்கள் தாய், சேயுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.
தற்போது மருத்துவமனையில் தாய், சேயும் நலமாக உள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...