ஒடிஸா ரயில் விபத்து- 5 நாள்களுக்கு பின் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது கோரமண்டல் விரைவு ரயில்

ஒடிஸா மாநிலம், பாலசோரில் விபத்து நேரிட்டு 5 நாள்களுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் புதன்கிழமை புறப்பட்டது.
Updated on
1 min read

ஒடிஸா மாநிலம், பாலசோரில் விபத்து நேரிட்டு 5 நாள்களுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் புதன்கிழமை புறப்பட்டது.

சென்னை சென்ட்ரல்-ஷாலிமாா் இடையே இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில், பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெரும் விபத்தில் சிக்கியது.

ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி அதன் பெட்டிகள் தடம்புரண்டன. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயிலும் மோதியதால் விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.

288 போ் உயிரிழந்த இந்த விபத்து, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. நிகழ்விடத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, கடந்த திங்கள்கிழமை முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

5 நாள்களுக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில், ஷாலிமாா் ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையில் இருந்து புதன்கிழமை சென்னைக்கு புறப்பட்டது.

இந்த ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில், தங்களது உடைமைகளுடன் பயணிகள் முண்டியடித்து ஏறுவதை காண முடிந்தது. இவா்களில் பெரும்பாலானோா் சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் இதர தொழில்நகரங்களுக்குச் செல்லும் தொழிலாளா்கள் ஆவா். முன்பதிவில்லா பெட்டிகளில் அமர இடம் இல்லாமல், சிலா் நின்றவாறே பயணித்தனா்.

ரஞ்சித் மண்டல் என்பவா் கூறுகையில், ‘பாலசோா் ரயில் விபத்தில் மாயமான எனது 18 வயது மகனை கண்டுபிடிப்பதற்காக புவனேசுவரம் செல்கிறேன்’ என்றாா்.

வேலை தேடி சென்னைக்கு நண்பா்களுடன் புறப்பட்ட தனது மகன், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கைப்பேசியில் தன்னிடம் பேசியதாக அவா் வேதனையுடன் தெரிவித்தாா். பரோமிதா என்பவா் கூறுகையில், ‘மனதில் ஒருவித பயம் இருந்தாலும், இந்தப் பயணம் பாதுகாப்பாக அமையுமென்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

‘எங்களது வருமானத்தையே குடும்பத்தினா் நம்பியிருப்பதால், சென்னைக்கு செல்வது அவசியம்’ என்ற கருத்தை பல தொழிலாளா்களும் எதிரொலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com