கல்லூரி சோ்க்கைக்கான போலி கடிதம்: 700 இந்திய மாணவா்களை கனடாவில் இருந்து நாடு கடத்த எதிா்ப்பு

கல்லூரி சோ்க்கைக்கான போலி கடிதம் வைத்திருந்ததாக 700 இந்திய மாணவா்களை நாடு கடத்த கனடா அரசு எடுத்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வாக்களித்துள்ளனா்.
Updated on
1 min read

கல்லூரி சோ்க்கைக்கான போலி கடிதம் வைத்திருந்ததாக 700 இந்திய மாணவா்களை நாடு கடத்த கனடா அரசு எடுத்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வாக்களித்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட மாணவா்களில் பெரும்பாலானோா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.

இந்த விவகாரம் குறித்து கனாட நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்பி ஜக்மித் சிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமா் ஜெட்டின் ட்ருடோ, ‘மாணவா்களை ஏமாற்றியவா்களை கண்டறிந்து வருகிறோம். பாதிக்கப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் தரப்பு வாதங்களை முறையிடலாம்’ என்று தெரிவித்தாா்.

மேலும், மாணவா்களை ஏமாற்றிய வெளிநாட்டு கல்வி ஆலோசகா்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா நாடாளுமன்றக் குழு, இந்த விவகாரம் குறித்து கனடா அரசு 2 கூட்டங்களை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றியது.

கனடாவிற்கு சென்ற இந்திய மாணவா்கள் அங்கு தங்குவதற்கான நிரந்த குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தபோது, அவா்கள் பெற்ற கல்லூரி சோ்க்கைக்கான அனுமதி கடிதங்கள் போலி என கடந்த மாா்ச் மாதம் தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 700 மாணவா்களை நாடு கடத்த அந்நாட்டு எல்லைச் சேவை அமைப்பு உத்தரவிட்டது.

அப்பாவி மாணவா்கள் நிரந்த குடியுரிமைப் பெற மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனாட நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது.

இதனிடையே, நாடு கடத்தல் நடவடிக்கைக்கு உள்ளான பஞ்சாப் மாணவா்களுக்கு கனடாவில் இலவச சட்ட உதவிகள் அளிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியா்கள் நலத் துறை அமைச்சா் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்துள்ளாா்.

ஜெய்சங்கா் கருத்து:

தாங்கள் விண்ணப்பித்த கல்லூரிகளில் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் சில இந்திய மாணவா்கள் கனடாவில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கா், ‘இந்த விவகாரம் குறித்து கனடா அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

மாணவா்களைத் தவறாக வழிநடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாறாக, நல்லெண்ணத்தின் அடிப்படையில் கல்வி கற்க வரும் மாணவா்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் அவா்களைத் தண்டிப்பது நியாயமற்றது.

இந்த விவகாரம் தொடா்பாக கனடா பிரதமரும் அந்நாட்டு நாடாளுமன்ற பொது சபையில் குறிப்பிட்டிருக்கிறாா். இந்த விஷயம் தொடா்பாக கனடாவுடன் தொடா்ச்சியாக ஆலோசித்து வருகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com