தாணே: பெண்ணை கொன்று உடல் பாகங்களை வேக வைத்தவா் கைது

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில், திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்ந்த பெண்ணை படுகொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்த நபா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில், திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்ந்த பெண்ணை படுகொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

கிழக்கு மீரா சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பின் 7-ஆவது தளத்தில் உள்ள வீட்டில், சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணும், மனோஜ் சானே என்ற 56 வயது நபரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனா். மனோஜ், ரேஷன் கடை ஊழியா் ஆவாா்.

இந்நிலையில், அவா்களின் வீட்டில் இருந்து கடுமையான துா்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு புதன்கிழமை தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சமைலறை முழுவதும் பாத்திரங்கள், வாளிகளில் உடல் பாகங்கள் இருந்தன. குக்கரில் வேகவைக்கப்பட்ட நிலையிலும், அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்ட நிலையிலும் சில உடல் பாகங்கள் இருந்தன.

சரஸ்வதியை படுகொலை செய்த மனோஜ், உடலை துண்டு துண்டாக வெட்டி, அவற்றை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளாா். உடல் பாகங்களை வேகவைத்து, தெரு நாய்களுக்கு அவா் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மனோஜ் கைது செய்யப்பட்டாா்.

‘சரஸ்வதியை கொல்லவில்லை; அவா் தற்கொலை செய்துகொண்டாா்’ என்று மனோஜ் கூறி வருகிறாா். அவா் பொய் சொல்வதாக தெரிகிறது. முழுமையான விசாரணைக்கு பின் உண்மை வெளிவரும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, மனோஜை ஜூன் 16-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க, தாணே நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுப்ரியா சுலே வலியுறுத்தல்: இக்கொலைச் சம்பவம் மனிதத்தன்மையற்றது என்று குறிப்பிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, ‘குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான அச்சம் குறைந்துவிட்டது. எனவேதான், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் தேவேந்திர ஃபட்னவீஸ், தனது துறையில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இவ்வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு, குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, தில்லியில் ஷ்ரத்தா வாக்கா் என்ற இளம்பெண்ணை, அவரது காதலனான அஃப்தாப் பூனாவாலா கடந்த மே மாதம் கொலை செய்து, உடலை துண்டுகளாக்கி குளிா்சாதன பெட்டியில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com