

அதிகாரிகள் பணி நியமன அதிகாரத்தை தில்லி அரசுக்கு வழங்காமல் இருக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆதரவை புதன்கிழமை அறிவித்தது.
தில்லியில் அஜய் பவனில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜாவை முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை டி.ராஜா வெளியிட்டார்.
காவல் துறை, நிலம், பொது அறிவிப்பு ஆகியவற்றை தவிர பிற அதிகாரங்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தில்லி அரசுக்கு வழங்கி தீர்ப்பளித்தது. ஒரு வாரத்துக்கு பிறகு தில்லி அரசின் சேவைகள்- நிர்வாக அதிகாரங்களை துணைநிலை ஆளுநருக்கு மீண்டும் வழங்கும் வகையில், மத்திய அரசு கடந்த மே 19-ஆம் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகள், அரசியல் கட்சித் தலைவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சத்தா உள்ளிட்டோர் புதன்கிழமை நேரில் சென்றனர். அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா, செயலர் நாராயணா ஆகியோர் வரவேற்று சுமார் அரை மணிநேரம் ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் கேஜரிவால், டி.ராஜா ஆகிய இருவரும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் கேஜரிவால் கூறியதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அலட்சியம் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்யும் நோக்கில் இந்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
இந்தச் சட்டமானது தில்லிக்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கும் வரலாம். இந்த அவசரச் சட்டம் அமைச்சர்களின் முடிவுகளை மீறும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்குவதாக உள்ளது. தில்லி ஜல் போர்டு, தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) போன்ற அமைப்புகளின் மீது மத்திய அரசுக்கு கட்டுப்பாட்டை வழங்குகிறது.
இதுபோன்ற ஒரு சூழலை எந்த மாநில அரசும் எதிர்கொள்ள முடியும். பாஜகவை தில்லி மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மாநகராட்சித் தேர்தலிலும் தோற்கடித்துள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் புற வாசல் வழியாக அரசை இயக்க விரும்புகின்றனர் என்றார் கேஜரிவால்.
மேலும், பிகார் மாநிலம், பாட்னாவில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இந்த அவசர சட்ட விவகாரம் எழுப்பப்படும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா கூறியதாவது: தில்லி மற்றும் புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரி வருகிறது.
தில்லி அரசைப் பொருத்தவரை மத்திய அரசு செய்திருப்பது கொடூரமானது. நம் நாட்டில் உள்ள அனைத்து கூட்டாட்சி நிர்வாகக் கொள்கைகளையும் இது மீறுவதாக உள்ளது.
மேலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த அவசர சட்டத்தை நாங்கள் அனைத்து சக்தியுடனும் எதிர்க்கிறோம்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு வரும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் அவசர சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தப்படும்.
தில்லிக்கும், புதுச்சேரிக்கும் முழு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.