

ராஜஸ்தானில் பிபர்ஜாய் புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால், அரசு மருத்துவமனைக்கு வெள்ளநீர் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று ஜலூர், சிரோஹி, பார்மர் மற்றும் பாலி மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பதிவாகியது. பல கிராமங்கள் நீரில் மூழ்கி அதிக சேதமடைந்தது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பாலி மற்றும் ஜலூரில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 30 பேர் மீட்கப்பட்டதாக பேரழிவு மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை செயலாளர் பி.சி கிஷன் தெரிவித்தார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஜ்மரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
ஜெய்ப்பூர், பாலி, பில்வாரா, சிட்டோர்கரில் டோங்க், பொண்டி, சவாய் மாதோபூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.