

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அது தோல்வியடைந்திருந்தால், தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததாக பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் சஞ்சய் ரௌத், ஒருவரின் தற்கொலை திட்டத்தை அறிந்து கொண்டும் மௌனமாக இருந்த குற்றத்துக்காக உடனடியாக அமைச்சர் கேசர்கரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
ஒருவேளை, தான் எடுத்த நடவடிக்கைகளில் தோல்வி ஏற்பட்டால், கட்சித் தலைமையை தொடர்பு கொண்டு, நடந்த எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு என்றும், அனைத்து எம்எல்ஏக்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தவும், பிறகு துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தார் என்று அமைச்சர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிவ சேனை கட்சியின் நிறுவன நாளில் ஒரு முறை ஷிண்டே மிக மோசமாக அவமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் இதற்காக ஒரு நாள் நிச்சயம் எதையாவது செய்வேன் என்று நினைத்தார். அதன் தொடர்ச்சிதான் இந்த கிளர்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கூட்டணி ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணி மீது சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கொண்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சிவசேனையைச் சோ்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்தனா். இதையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
எதிா்க்கட்சியாக இருந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.