எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்: பிரதமர் மோடி

இந்தியர்களுக்கு பணிக்காக வழங்கப்படும் எச்1பி விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 
எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்: பிரதமர் மோடி


வாஷிங்டன்: இந்தியர்களுக்கு பணிக்காக வழங்கப்படும் எச்1பி விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்ற எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அந்நாட்டில் உள்ள நிறுவனங்களில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பணியாற்றுகின்றனா். அங்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பணியாளா்களைப் பணியமா்த்த எச்1பி விசாவை தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் சாா்ந்துள்ளன.

எச்1பி நுழைவு இசைவு விசா 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன் பின்னா் அதனைப் புதுப்பிக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவிலேயே அந்த விசாவை புதுப்பிக்கும் நடைமுறை இருந்தது. அதன் பின்னா், அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டவா்கள் எச்1பி விசாவை புதுப்பிக்க, பெரும்பாலும் அவரவரின் சொந்த நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள அமெரிக்க துணைத் தூதரகங்களில் விசா காலத்தை நீட்டிப்பதற்கான ஆவணங்களை காட்டி விசாவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இது அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டவா்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

எச்1பி நுழைவு இசைவு (விசா) வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால் அவர் குடியுரிமை பெறும் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில் எச்1பி நுழைவு இசைவு விசாவை புதுப்பிப்பதற்கான விதிமுறைகளை சீரமைத்து, அதைப் பெறுவதில் உள்ள சிரமத்தை குறைக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலேயே அங்குள்ள தூதரகத்தில் புதுப்பிக்கத்தக்க எச்1பி விசாக்களை அந்நாடு அறிமுகப்படுத்த உள்ளது. இது அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு நாட்டு மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கையின் அங்கம் என்று இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்க மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்திருந்தார்.

எச்1பி விசாவை புதுப்பிக்கும் புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிப்பதற்கு செல்லும் மாணவர்கள், வேலை தேடி செல்லும் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியா்கள் பயனடைவா் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே வெள்ளிக்கிமை உரையாற்றினார். 

அப்போது, இந்திய-அமெரிக்கர்கள் தங்களுடைய எச்1பி நுழைவு விசாக்களை புதுப்பித்துக்கொள்ள இந்தியாவுக்கு செல்ல வேண்டியதில்லை. அமெரிக்காவிலேயே புதுப்பித்துக்கொள்ளலாம். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக எச்1பி விசாவை அங்கே புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முயல்கிறார் என மோடி தெரிவித்தார். 

இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையே தொழில்சார் மற்றும் திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான பெரும் பங்களிப்பை வழங்குவதாக ஜோ பைடனும், மோடியும் கூட்டாக தெரிவித்தனர்.

மேலும் " எச்1பி விசாக்களை புதுப்பித்துக்கொள்ளவதற்கான செயல்முறையை மேலும் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகம், சுற்றுலா மற்றும் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான பயணத்தை எளிதாக்குவதற்கான கூடுதல் வழிமுறைகளை அடையாளம் காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ”

“ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் போது புதிய ஆற்றலுடன் புதிய இலக்கை நிர்ணயிக்கும் காலம் வரும். இன்று இந்தியாவும் இதேபோன்ற காலக்கெடுவை கடந்து சென்று கொண்டிருக்கிறது" என்று மோடி கூறினார்.

மேலும் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருவதாகவும், நாட்டின் தீவிர வறுமை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் கூறினார்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து பேசிய மோடி, இந்த கூட்டாண்மை 21 ஆம் நூற்றாண்டின் உலகின் தலைவிதியை மாற்றும். இந்த உறவு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான "வசதிக்கான விஷயம் அல்ல, ஆனால் ஒரு நம்பிக்கை" என்று மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com