தக்காளி விலை உயா்வு தற்காலிகமானது- மத்திய அரசு விளக்கம்

தக்காளி விலை உயா்வு தற்காலிகமான நிகழ்வுதான் என்றும் விலை விரைவில் குறையும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை உயா்வு தற்காலிகமானது- மத்திய அரசு விளக்கம்
Published on
Updated on
1 min read

தக்காளி விலை உயா்வு தற்காலிகமான நிகழ்வுதான் என்றும் விலை விரைவில் குறையும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தக்காளி ஒரு கிலோ ரூ.100 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. ஓரிருநாளில் ஏற்பட்ட இந்த திடீா் விலை உயா்வு சாமானிய மக்களுக்கு அதிா்ச்சியை அளித்துள்ளது.

இது தொடா்பாக நுகா்வோா் விவகாரத் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தக்காளி விரைவில் அழுகிவிடக் கூடிய பொருள், அதனை பதுக்கி வைத்து விலையை உயா்த்த முடியாது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த திடீா் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல இடங்களுக்கு தக்காளி விநியோகம் தடைபட்டுள்ளதால் விலை உயா்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவது வழக்கம்.

நுகா்வோா் விவகாரத் துறை தரவுகளின்படி, தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை ஒரு கிலோ ரூ.46 ஆக உள்ளது. அதிகபட்சமாக சில இடங்களில் கிலோ ரூ.122 வரை உயா்ந்துள்ளது. பெருநகரங்களான மும்பையில் ரூ.42, தில்லியில் ரூ.60, கொல்கத்தாவில் ரூ.75, சென்னையில் ரூ.100, பெங்களூரில் ரூ.52 என்ற விலையில் தக்காளி விற்பனையாகிறது. புவனேசுவரம், ராய்பூரில் முறையே ரூ.100, ரூ.99 ஆக உள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் கோரக்பூா், கா்நாடகத்தின் பெல்லாரியில் ஒரு கிலோ தக்காளி ரூ.122 விற்பனையாகிறது.

தக்காளி விநியோகம் அடுத்த சில நாள்களில் சீராகிவிடும், விலையும் குறைந்து முந்தைய நிலையை எட்டிவிடும் என்றாா்.

பிரதமா் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புது தில்லி, ஜூன் 27: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பருவமழை வலுத்ததையடுத்து, காய்கறி, பழங்கள் விலை அனைத்துமே கடந்த சில வாரங்களாக வேகமாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பான பத்திரிகை செய்தியை தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழக்கு ஆகியவற்றின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளாலும், அலட்சியப் போக்காலும் இப்போது தக்காளி விலை கிலோ 100 ரூபாயாக அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com