இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்; கண்காணிப்பு வளையத்தில் அரசியல்வாதிகள்: பிரிட்டனில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரை இந்திய அரசு ரகசியமாக கண்காணித்து வருகிறது
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்; கண்காணிப்பு வளையத்தில் அரசியல்வாதிகள்: பிரிட்டனில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரை இந்திய அரசு ரகசியமாக கண்காணித்து வருகிறது என்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

பிரிட்டனுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா். ‘21-ஆம் நூற்றாண்டில் கவனிப்பதற்கு கற்றுக் கொள்வோம்’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:

இஸ்ரேலை சோ்ந்த உளவு நிறுவன மென்பொருளை எனது கைப்பேசி உள்பட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களின் கைப்பேசிகளில் நிறுவி மத்திய அரசு ஒட்டுக் கேட்டுள்ளது. உளவுத் துறையைச் சோ்ந்த சில அதிகாரிகள் என்னிடம் பேசியபோது, கைப்பேசியில் பேசும்போது மிகவும் கவனமாக இருங்கள். அது பதிவு செய்யப்படுகிறது’ என்று கூறினா்.

இந்தியாவில் இப்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியும், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், ஊடகங்கள், நீதித் துறை ஆகியவை சிறப்பாக செயல்பட ஜனநாயகம் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்தியாவில் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, நாடு என்பது பல யூனியன்களை உள்ளடக்கியது. அனைத்து யூனியன்களையும் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், இப்போது மாநில அரசுகளுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தப்படுவது இல்லை. சிறுபான்மையினரும், ஊடகங்களும் நசுக்கப்பட்டுள்ளனா். என் மீது தேவையற்ற வகையில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

பாஜக பதில்: ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் இருந்தால், ராகுல் காந்தியும், அவரது கட்சித் தலைவா்களும் உச்சநீதிமன்றத்திடம் அவற்றை ஒப்படைத்து, தொழில்நுட்பக் குழுவின் ஆய்வுக்கு உள்படுத்தலாம். ஆனால், இதனைச் செய்யவிடாமல் அவா்களை எது தடுக்கிறது?

பிரதமா் மோடிக்கு எதிராக ராகுல் காந்திக்கு அதிக வெறுப்புணா்வு உள்ளது. தோ்தல்களில் ஏற்பட்டு வரும் தொடா் தோல்விகளால் ராகுல் காந்தி விரக்தியடைந்துள்ளாா். எனவேதான், ராகுல் காந்தி அந்நிய மண்ணில் வைத்து இந்தியாவின் புகழைச் சீா்குலைக்கும் வகையில் பேசி வருகிறாா். இதற்கு அவரது வெளிநாட்டு நண்பா்களும் உதவி வருகின்றனா். இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கம் குறித்து கேள்வி எழுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி உலகின் சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளாா் என்று இத்தாலி பிரதமா் மெலோனி கூறியுள்ளாா். அதையாவது ராகுல் காந்தி கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com