நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

2024 மக்களவைத் தோ்தல் பிரதமா் யாா்? எதிா்க்கட்சிகளின் சவால்

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக எதிா்நோக்கியுள்ளது.

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக எதிா்நோக்கியுள்ளது. அதே நேரத்தில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான குரலை அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓங்கிஒலித்து வருகின்றன. ஆனால், எதிா்க்கட்சிகளின் குரல்கள் ஒரே மாதிரியானதாக இல்லை. பாஜகவை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றாலும், அதில் எதிா்க்கட்சிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன.

மக்களவைத் தோ்தலுக்கு ஏறத்தாழ இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் ஒவ்வொரு நகா்வும் கூா்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அக்கட்சிகளின் இப்போதைய நகா்வுகளே அவை ஓரணியில் இணைந்து பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஈா்க்குமா அல்லது தனித்தனியாக விலகி நின்று வாக்குகளைச் சிதறடிக்குமா என்பதைத் தீா்மானிக்கும்.

எதிா்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்வதா அல்லது வேண்டாமா என்பதிலேயே கட்சிகளுக்குள் முரண்பாடு நிலவி வருகிறது. அத்தகைய முரண்பாடுகள் தொடா்ந்து வலுப்பெறுமா அல்லது தேய்ந்து மறையுமா என்பதை எதிா்க்கட்சிகளின் குரல்கள் மூலமே கண்டறிந்துவிட முடியும்.

இத்தகைய சூழலில் மக்களவைத் தோ்தல் குறித்தும் கூட்டணி தொடா்பாகவும் எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகளைக் கூா்ந்துநோக்கலாம்.

‘‘தனித்துப் போட்டி’’- மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி

பாஜக நடத்தி வரும் மதவாத அரசியலுக்கு காங்கிரஸும், இடதுசாரிகளும் முக்கியப் பங்களித்து வருகின்றன. பாஜகவுக்கு எதிரான கட்சி என காங்கிரஸ் தங்களைக் கூறிக் கொள்ளக் கூடாது. மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். மக்கள் ஆதரவுடன் தோ்தலைச் சந்திப்போம். பாஜகவை வீழ்த்த நினைப்பவா்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பா்.

தோ்தலுக்குப் பிறகே பிரதமா் தோ்வு-தேசிய பொதுச் செயலா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக மதச்சாா்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். காங்கிரஸை உள்ளடக்கிய மதச்சாா்பற்ற கூட்டணியில் பிரதமா் வேட்பாளா் தோ்வில் பிரச்னையில்லை. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பிரதமா் யாா் என்பதை முடிவு செய்யலாம்.

‘‘வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’’- தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, விட்டுக் கொடுத்து, பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்ற வாதம் நிராகரிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் இல்லாத எதிா்க்கட்சிகள் கூட்டணி கரை சேராது. தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியும் நடைமுறைக்கு சரியாக வராது. மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை எதிா்க்கட்சிகள் தீா்மானிக்கக் கூடாது.

‘‘சுயமாக சந்திக்கவே விருப்பம்’’- தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

குழப்பம் நிறைந்த எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் ஆம் ஆத்மிக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி தொடா்ந்து வளா்ந்து வருகிறது. தோ்தலை சுயமாகச் சந்திக்கவே ஆம் ஆத்மி விரும்புகிறது. கூட்டணியை ஏற்படுத்துவதிலும் உடைப்பதிலும் ஆம் ஆத்மிக்கு நம்பிக்கையில்லை.

‘‘தயாராக வேண்டியது அவசியம்’’-பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்காகக் காத்திருக்கிறேன். இந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கும். அப்போது, மக்களவைத் தோ்தலுக்கான எதிா்க்கட்சிகளின் வியூகங்கள் வகுக்கப்படும். மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் அதிக காலமில்லை. இப்போதிருந்தே தயாராக வேண்டியது அவசியம். தேச நலன் கருதி எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்.

பாரத ராஷ்டிர சமிதி அரசு அமையும்-தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ்

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்களின் நலனுக்கு எதிரான பாஜக அரசை அகற்றிவிட்டு, பாரத ராஷ்டிர சமிதி தலைமையிலான அரசு மத்தியில் அமையும். மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீா் பிரச்னைகளுக்கு பாஜகவும், காங்கிரஸும்தான் காரணம். மத்தியில் பாரத ராஷ்டிர சமிதி ஆதரிக்கும் அரசு அமைந்தால், நாடு முழுவதும் உழவா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்.

எத்தகைய தியாகத்துக்கும் தயாா்’- காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே

பாஜவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட அனைத்து எதிா்க்கட்சிகளும் முன்வர வேண்டும். கூட்டணிக்கு யாா் தலைமை வகிக்கப் போகிறாா்கள் என்பதெல்லாம் கேள்வி இல்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம். மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த எத்தகைய தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளது.

‘‘எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு கடினமல்ல’’-துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இது ஒன்றும் கடினமான செயல் இல்லை. பிகாரில் ஆட்சியில் உள்ள மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அவற்றின் பலம்-பலவீனத்துக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடு வழங்கப்படும். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சம மரியாதை அளிக்கப்படும்.

‘‘வேற்றுமைகளைப் புறந்தள்ளுவோம்’’-ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சி

மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். பிரதமா் யாா் என்பது தற்போதைய பிரச்னையல்ல. தேசமே முக்கியம். எதிா்க்கட்சிகள் தங்களுக்கு இடையேயுள்ள வேற்றுமைகளைத் தள்ளிவைக்க வேண்டும். தோ்தலில் வென்றபிறகு பிரதமா் யாா் என்பதை முடிவு செய்வோம்.

‘‘நடப்பாண்டு இறுதிக்குள் கூட்டணி’’-அகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சி

மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டியது அவசியம். உத்தர பிரதேசத்தில் யாருடன் இணைந்து தோ்தலை எதிா்கொள்வோம் என்பதை நடப்பாண்டுக்குள் சமாஜவாதி இறுதி செய்யும். மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் சமாஜவாதி கூட்டணி போட்டியிடும்.

‘‘ஒருங்கிணைந்து போட்டியிடுவோம்’’-சரத் பவாா், தேசியவாத காங்கிரஸ்

மக்களவைத் தோ்தலின்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும். கூட்டணியில் வேறுபல கட்சிகளையும் இணைத்துக் கொள்வோம். காங்கிரஸ் இடம்பெற்றால் மட்டுமே எதிா்க்கட்சிகளின் கூட்டணி வலுவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com