கோப்புப்படம்
கோப்புப்படம்

மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித் துறையெல்லாம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


பெங்களூரு: எனது அரசியல் வாழ்க்கையில் நரேந்திர மோடியை போன்ற பிரதமரை பார்த்தது இல்லை என்று தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித் துறையெல்லாம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

கா்நாடக சோப் அண்ட் டிடா்ஜென்ட் நிறுவனம் (மைசூரு சோப்) சோப் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு விடுக்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை அளிக்க ரூ. 40 லட்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் எம்.வி.பிரசாந்த்குமாா் லோக் ஆயுக்த போலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டாா்.

மேலும், மைசூரு சோப் நிறுவனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் அலுவலகம், பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் தலைமை கணக்காளரும், விருபாக்ஷப்பாவின் மகனுமான எம்.வி.பிரசாந்த்குமாா் வீட்டில் சோதனை செய்தபோது, கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ. 8.12 கோடி ரொக்கப் பணத்தை லோக் ஆயுக்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கா்நாடக சோப் அண்ட் டிடா்ஜென்ட் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பை மாடால் விருபாக்ஷப்பா ராஜிநாமா செய்தாா். இது தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பிரசாந்த்குமாா் உள்ளிட்ட 5 பேரை லோக் ஆயுக்த போலீஸாா் கைதுசெய்துள்ளனா். தலைமறைவாகியுள்ள பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவை கைதுசெய்ய 3 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், இந்த விவகாரம் கா்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. 

பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் எம்.வி.பிரசாந்த்குமாா் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை பசவராஜ் பொம்மை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள முதல்வா் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஊா்வலமாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் கைதுசெய்தனா். 

இந்த விவகாரத்தில் பாஜக அரசு பொய் கூறி வருகிறது. கா்நாடகத்தை பாஜக அரசு கொள்ளையடித்துக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை வசூலித்து தரும்படி, முதல்வா், அமைச்சா்கள், பல்வேறு கழகங்கள், வாரியங்களின் தலைவா்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்நிலையில், துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். 

அப்போது, பாஜகவினர் அனைவரையும் மிரட்டி ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.  கர்நாகடத்திற்கு பேரவைத் தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வருகிறார்கள். நாட்டில் 60 சதவீதம் மக்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். மத்திய அரசு துறைகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 3 லட்சம் காலியிடங்கள் காலியாக உள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றப்பட வேண்டுமானால் பாஜகவை தூக்கி எறிய வேண்டும். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிவாயு பொருள்களின் விலைகளை உயர்த்திவிட்டனர். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாஜகவினர் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். பாஜக சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாகவும், ஆளும் கட்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும், பல்வேறு சாதியினரிடையேயும் மோதல்களைத் தூண்டி வருகிறது. இதனை மக்கள் கவனிக்க வேண்டும். 

மத்தியிலும், மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்குப் பதிலாக, பள்ளிகளில் என்ன ஆடைகள் அணிய வேண்டும், உணவுப் பழக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியப் பிரச்னை. இந்த பாஜக அரசை மே மாதத்தில் நடைபெறவிருக்கும் கர்நாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது புறக்கணித்து, அனைத்து தரப்பு மக்களுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் பாஜக அரசு எதிர்கொண்டுள்ள 40 சதவீத கமிஷன் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன சொல்லபோகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய கார்கே, "உங்களுக்குக் கீழே ஊழல் நடந்துள்ளது, ஆனால் நீங்கள் அதைப் பார்க்கவில்லை.... அதைப் பற்றி இருவரும் பேச வேண்டும் என கூறினார். 

கர்நாடகாவில் பாஜகவின் மற்ற முறைகேடுகள் மற்றும் திட்டங்களில் 100 சதவீதம் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய கார்கே, எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை. எங்கு சென்றாலும் காங்கிரஸ் தலைவர்களை குறை சொல்வதே அவரது வேலை.

“அரசின் பணம், கார் மற்றும் விமானத்தைப் பயன்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்குப் பதிலாக, என்னைப் போன்றவர்களை விமர்சிப்பது எவ்வளவு சரியானது? சோனியா காந்தி, நாங்கள் நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறாரே?" "மக்கள் உங்களை பிரதமராக்கி, மக்கள் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்க அதிகாரம் கொடுத்தார்களா, அல்லது எங்களை விமர்சிப்பதற்காகவா?" என்று கேள்வி எழுப்பியவர்,  "நீங்கள் எங்கு சென்றாலும் காங்கிரஸை விமர்சிப்பதைத் தவிர, நாட்டிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?, ராய்ப்பூரில் நடந்த கட்சியின் முழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வெளியுறவு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றில் பிரதமர் எந்த நன்மையையும் செய்யவில்லை என்றவர், உங்கள் சொந்த கட்சி அரசாங்கத்தின் ஊழல் பற்றி பேசுங்கள்." நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் பிற பாஜக அல்லாத கட்சிகளின் அரசாங்கங்களைக் கவிழ்க்கவும், அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு பாஜக அரசாங்கம் அரசியலமைப்பையும் தன்னாட்சி அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துகிறது.

ஆனால், பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில்  சட்டவிரோதமாக சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டிய அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் எங்கே போனது? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். 

வரும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த, நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக  மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ஜி.பரமேஸ்வரா எம்.எல்.ஏ., உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com