கேரளத்தில் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்: ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!

கேரளத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு தகித்துவரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
கேரளத்தில் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்: ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!

கேரளத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு தகித்துவரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தினசரி வெப்பநிலை குறியீட்டு அளவை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டும் சுமார் 54 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. இது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐஎம்டி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

வெப்பக் குறியீடு என்பது வெப்பநிலையைக் கணக்கிடும் ஒரு குறிகாட்டியாகும். வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கும்போது கூட, அதிகரிக்கும் ஈரப்பதத்துடன் குறியீட்டெண் உயரும். அதன்படி கடந்த சில தினங்களாகக் கடற்கரையோரங்களில் வெப்பக் குறியீடு அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ உதவிப் பேராசிரியரான டாக்டர் டி.எஸ்.அனிஷ் கூறுகையில், 

அதிகப்படியான வெப்பம், அடிப்படையில் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மோசமான தாக்கத்தை இது ஏற்படுத்தும். இவர்கள், எலக்ட்ரோலைட்டுகளால் செறிவூட்டப்பட்ட திரவங்களை அதிகம் எடுத்துக்கொள்வதினால் வெப்ப பக்கவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். வெப்பத் தாக்குதலைப் பெற ஒருவர் வெயிலில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிற்குள் இருப்பவர்களும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வெப்பநிலை அதிகரிப்பு நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு இது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். 

ஹீட் ஸ்ட்ரோக்(வெப்ப பக்கவாதம்) என்றால் என்ன?

மாரடைப்பைப் போன்று மிகவும் ஆபத்தானது இந்த ஹீட் ஸ்ட்ரோக். அதிக வெப்பத்தின் காரணமாக நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்துவிடுவது தான் இந்த ஹீட் ஸ்ட்ரோக். 

நெஞ்சுவலியைப் போலவே திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு. இது பெரும்பாலும் கோடைக்காலத்தில் ஏற்படும். 

நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று மயங்கி விழுந்து இறந்துவிடுவது கோடைக்காலத்தில் இது சர்வ சாதாரணமாக நிகழும். கோடை வெப்பம் தாங்காமல் பலர் இவ்வாறு உயிரிழக்கவும் செய்வார்கள். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர். 

இதன் அறிகுறிகள் என்ன? 

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுவான அறிகுறிகளில் பலவற்றைக் கொண்டிருக்கலாம். 

உடல் சூடு அதிகரித்தல், வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், எரிச்சல் என அறிகுறிகளை ஏற்படுத்தும். 

அசௌகரியம் ஏற்பட்டால் என்ன செய்வது?

வீட்டில் அடைந்து கிடக்காமல், காற்றோட்டமான பகுதிக்குச் செல்லவேண்டும். 

தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும். 

அதிகப்படியான நீர் பருக வேண்டும். அப்படியும் சீரடைவில்லையெனில் உடனே மருத்துவரை அணுகலாம். 

எப்படித் தற்காத்துக் கொள்வது? 

தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். 

கூடுமானவரை பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கலாம். 

வெயிலில் வெளியே செல்லும் போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தலாம். 

மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்.

உணவு விநியோகம் செய்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

விலங்குகளை வெயிலில் விடுவதைத் தவிர்க்கவும். 

இவ்வாறு இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றிவந்தால் வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) நம்மை நிச்சயம் தாக்கது என்பது உறுதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com